போலிஸ்: கைபேசி மோசடியில் பொதுமக்கள் $24,000 இழப்பு

போலிஸ்: கைபேசி மோசடியில் பொதுமக்கள் $24,000 இழப்பு

1 mins read
1cc7669c-d819-4ccf-b670-f8c5ceb9e05d
-

இணையத்தளங்கள் மூலம் கைபேசி வாங்கும் மோசடியில் சிக்கி குறைந்தது $24,000ஐ பாதிக்கப்பட்டோர் இழந்துள்ளதாக போலிசார் நேற்று தெரிவித்தனர். இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களின் அடிப்படையில் இத்தொகை கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனவரி முதல் மே மாதம் வரை குறைந்தது 71 புகார்கள் கிடைத்துள்ளதாக போலிசார் கூறினர். இம்மோசடி சம்பவங்களில் இணையம் வழி கைபேசிகளை வாங்குவதாக எண்ணி பலர் கடனில் சிக்கினர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களின் அடையாள அட்டை எண், 'சிங்பாஸ்', வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட்டனர். கைபேசிகளைத் தவணைத் திட்டத்தில் வாங்குவதாக எண்ணி அவர்கள் இவ்வாறு அவ்விவரங்களைத் தெரியப்படுத்தியதாகக் கூறப்பட்டது.

ஆனால் அதைத் தொடர்ந்து தங்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகை போடப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர். அதன்பின் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்துக் கட்டச் சொல்லி மோசடிக் கும்பல் மிரட்டியதாக அறியப்படுகிறது. வேறு சில சம்பவங்களில் கைபேசிகளை வாங்க கடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டது. அதற்கு ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட தொகை வங்கிக் கணக்குகளில் போடப்பட்டு பின்னர் கடன் மீண்டும் கேட்கப்பட்டது. இதன் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு போலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அறிமுகமில்லாதவர்களிடமும் அடையாளம் தெரியாத இணையத்தளங்களிலும் தனிநபர் தகவல்களைத் தெரிவிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஏதேனும் பொருள் வாங்குவ தென்றால் அதை விற்பனை செய்யும் நிறுவனம், விற்பனையாளர் ஆகியவற்றின் தொடர்பில் நம்பகத்தன்மையை உறுதிசெய்துகொள்ளுமாறும் போலிசார் வலியுறுத்தினர்.