டாக்சி கட்டணங்களைச் செலுத்த தவறிய ஆடவருக்கு நன்னடத்தை கண்காணிப்பு

டாக்சி கட்டணங்களைச் செலுத்தாமல் இருந்துவிட்டதோடு இரு டாக்சி ஓட்டுநர்களின் நெட்ஸ் ரொக்க அட்டைகளைத் திருடிய 19 வயது ஆடவர் ஒருவர், 21 மாதகால நன்னடத்தை கண்காணிப்பின்கீழ் இருப்பார்.

இப்போது 20 வயதாகும் இப்ராஹிம் குத்துபுதீனுக்கு 100 மணிநேரம் சமூகச் சேவை புரியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில்  இப்ராஹிம் குறைந்தது 10 டாக்சி கட்டணங்களைச் செலுத்த தவறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்டணங்கள் $10.35க்கும் $32.20க்கும் இடைப்பட்டவை.

டாக்சி பயணம் ஒவ்வொன்றும் முடிவடைந்தபின், நெட்ஸ் வழியாக மின்கட்டணம் செலுத்த இப்ராஹிம் பலமுறை முற்படுவார். ஆனால் அனைத்து முறையும் கட்டணம் செல்லாது. டாக்சி ஓட்டுநர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றிவிடுவதாக அவர் கூறுவார். ஆனால் வாக்குறுதியை அவர் கடைசிவரை காப்பாற்றவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த பல டாக்சி ஓட்டுநர்கள், டாக்சி நிறுவனத்திடம் அல்லது போலிசிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் இரு டாக்சி ஓட்டுநர்களின் கவனத்தைத் திசைதிருப்பி அவர்களது ரொக்க அட்டைகளை இப்ராஹிம் திருடினார்.

ரொக்க அட்டைகளைத் திருடியதாக இரு குற்றச்சாட்டுகளையும் டாக்சி கட்டணங்களைச் செலுத்த தவறியதாக 10 குற்றச்சாட்டுகளை இப்ராஹிம் ஒப்புக்கொண்டார்.

இப்ராஹிம்மின் நன்னடத்தையை உறுதிசெய்ய அவரது தாயார் $5,000 பிணைத் தொகையை வழங்கினார்.