உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை பதிவேற்றம் செய்த ஆடவர் கைது

உள்ளாடைகளை நுகரும் காட்சிகளை பதிவேற்றம் செய்த ஆடவர் கைது

1 mins read

சுவா சூ காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி புளோக் ஒன்றில், பெண்களின் உள்ளாடைகளைத் தாம் நுகர்வதைக் காட்டும் காட்சிகளை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 34 வயது ஆடவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அந்த ஆடவரின் மூன்று இன்ஸ்டகிராம் பதிவுகள் பற்றி வியாழக்கிழமை பல புகார்கள் கிடைத்ததாக போலிசாரின் அறிக்கை தெரிவித்தது.

வீவக புளோக்கின் பொது நடைபாதையில் அந்த ஆடவர் இந்தக் கீழ்த்தரமான செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள் வியாழக்கிழமை மாலை இணையத்தில் வலம் வந்தன. அந்த ஆடவரை அடையாளம் கண்ட ஜூரோங் போலிஸ் பிரிவு அதிகாரிகள், பொதுத் தொல்லை விளைவித்த குற்றத்திற்காக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அவரைக் கைது செய்தனர். அந்த ஆடவரின் பதிவுகள் இன்ஸ்டகிராம் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக போலிசார் தெரிவித்தனர். அவர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு $1,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.