உயர்ந்து வரும் கடல் நீர் மட்டத்திலிருந்து சிங்கப்பூரைக் காப்பாற்றும் நீண்டகாலத் திட்டத்திற்கு $100 பில்லியனுக்கு மேல் செலவாகக்கூடும் என்று பிரதமர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தினால் எழும் அச்சுறுத்தல்களில் இதுவும் ஒன்று என்று கூறிய அவர், தாழ்வான தீவுகளே இதுபோன்ற மாற்றத்தினால் பாதிக்கப்படும் ஆபத்துக்குரியவை என்றார்.
கடல்நீர் மட்ட உயர்விலிருந்து சிங்கப்பூரைக் காக்க பல தீர்வுகள் உள்ளன. தீவின் கரை பகுதியை மீட்டு அணைகரைகளோடு இணைப்பது அல்லது கடற்கரையோரத்தைப் பாதுகாக்க நிலப்பகுதிகளை எழுப்புவது போன்றவை அவை. ஆனால் இவற்றைச் செய்து முடிக்க ஏராளமான பொருட்செலவு ஏற்படும்.
பத்தாண்டுகாளில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாக இருந்தால் நமக்கு இப்போதிருக்கும் காலமும் அதற்கான வளமும் போதுமானவையாக இருக்காது. அதுவே 50 ஆண்டு அல்லது 100 ஆண்டு பிரச்சினையாக இருப்பின் அந்தளவுக்கு நீண்ட காலத்துக்கான தீர்வுகளை நம்மால் செயல்படுத்த முடியும்.
பருவநிலை மாற்றம் என்பது மனித இனம் சந்திக்க இருக்கும் ஆகப்பெரிய சவால்களில் ஒன்று. சிங்கப்பூர் ஏற்கெனவே வெப்பமயத்தை அனுபவித்து வரும் நிலையில் வரும் காலங்களில் அது இன்னும் மோசமடையும்.உச்சக்கட்ட வானிலை நிலவரம், புதிய வியாதிகள், உணவுப் பற்றாக்குறை போன்றவற்றோடு போர்கூட ஏற்படலாம். இவை எல்லாம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகள், ஆபத்துகள்.
பருவநிலை மாற்றத்திற்கான தற்காப்பு நடவடிக்கைகள் சிங்கப்பூர் ஆயுதப் படை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்பானவை. மிகவும் கடினமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அவை.
தீர்வுகளை நோக்கி படிப்படியாக செயல்படுவது, ஆண்டுக்காண்டு நிலையான வரவு செலவுத் திட்டத்தை நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகளை தலைமுறை தலைமுறையாகச் செய்யப்பட வேண்டியனவைகளாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
இப்படியே செய்துகொண்டு போனால் நம்மால் தாக்குப்பிடிக்க இயலும் என்பதோடு உரிய நேரத்தில் சமாளிப்புக்கு நாம் தயாராக இருப்போம். சிங்கப்பூர் ஆயுதப் படை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் தற்காப்பு நடவடிக்கைகள் நமக்கு அத்தியாவசியமானவை. வாழ்வா சாவா என்ற பிரச்சினையோடு தொடர்புடைய அம்சங்கள் இவை. நமது தீவு தேசத்தை இப்போதுள்ள நிலையிலேயே காப்பாற்றிச் செல்ல எல்லா வகையிலும் இறங்கிச் செயல்பட வேண்டியநிலை இவை," என்றார்.

