பிரானித் தீவிலுள்ள சிங்கப்பூர் துறைமுக ஆணைய முனையம் இடமாற்றப்பட்டதும் செந்தோசா, பிரானி தீவுகள் பெரிய அளவில் மேம்பாடு காணவுள்ளன.
இதற்கான பெருந்திட்டத்தை நேற்று அறிவித்த, தற்போது பாசிர் ரிஸில் உள்ளது போன்று புலாவ் பிரானியில் 'டவுன்டௌன் சவுத்' உல்லாசத் தளம் அமைக்கப்படவுள்ளது என்றார் பிரதமர் லீ.
இந்தப் பகுதியின் மேம்பாடுகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது, இங்கு தொழிலாளர் இயக்கத்துக்கு டவுன் டௌன் ஈஸ்ட் போல் உல்லாசத் தளத்தை அமைக்க வேண்டும் என்று என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கேட்டபோது அதற்குத் தாம் ஒத்துக்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நாட்டுக்குப் பங்களித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கேளிக்கைத் தளம் அமைகிறது என்றார் அவர். தொழிலாளர்களுக்குக் கட்டுப்படியாகும் செலவில் குடும்பத்துடன் களித்து மகிழ ஏற்ற உல்லாசத்தளமாக இது அமையும். பிரானி தீவில் மேலும் புதிய சுற்றுலா இடங்களும் வசதிகளும் உருவாக்கப்படவுள்ளன. பிரானி தீவுடன் செந்தோசாவும் மேம்படுத்தப்ப வுள்ளது. செந்தோசா கடற்கரைப் பகுதி புதுநிர்மாணம் பெறவுள்ளது. அதன் இயற்கையான, மரபுடைமைப் பாதை விரிவாக்கப்படவுள்ளது என்றார் திரு லீ.
செந்தோசாவில் முன்பு கடலடி உலகம் இருந்த இடம், உணவகங்கள், கடைகள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கூடங்கள், இடங்கள், நீர்முகப்பு தங்குமிடங்களுடன் சிலோசி கிரீன் என மேம்படுத்தப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய மேம்பாட்டுத் திட்டங்களுடன் சிங்கப்பூரின் தெற்கு நீர் முகப்புப் பகுதி குடியிருப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் பொழுதுபோக்கு வதற்கும் ஏற்ற சிறந்த இடமாக உருமாற்றம் காணும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஃபோர்ட் கேனிங்கில் இருந்து பாடாங் வரையில் தற்போது ஸ்டாம்ஃபர்ட் சாலை உள்ள இடத்தில், தொன்மையான மண்சுவர் இருந்தது. அதன் அருகே, ஓர் ஓடை இருந்தது. அதுதான் இன்று ஸ்டாம்ஃபர்ட் கால்வாய் ஆகியுள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கப்பூர் எவ்வாறு உருமாற்றம் பெற்று வந்துள்ளது, ஒவ்வொரு தலைமுறையும் அவர்களின் முன்னோர்களின் அடியொற்றி நாட்டை எவ்வாறு மேம்படுத்தி உள்ளனர் என்பதை விளக்கிய பிரதமர் இந்த நிலை இனியும் தொடரும் என்றார்.

