முதிய சிங்கப்பூரர்கள் அதே வேலை நியமன நிபந்தனைகளின் பேரில் தொடர்ந்து வேலை பார்க்க விரும்பினால் 2030ல் 65 வயது வரை அவர்கள் பணியாற்றலாம். அதோடு 55 முதல் 70 வயது வரை உள்ள ஊழியர்களுக்கான மத்திய சேம நிதிச் சந்தா சுமார் அடுத்த 10 ஆண்டுகளில் உயர்த்தப்படும்.
பிரதமர் லீ சியன் லூங் நேற்று இந்த மாற்றங்களை தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார்.
சிங்கப்பூரர்களின் ஆயுள் அதிகரித்து இருப்பதனாலும் அவர்கள் வேலையில்லாமல் அதிக காலத்தை கடத்த விரும்பவில்லை என்பதாலும் அரசாங்கம், வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு செய்து இருக்கிறது.
அதோடு, 55க்கும் அதிக வயதுள்ள ஊழியர்களுக்கான மத்திய சேம நிதிச் சந்தாவை அதிகரிக்கவும் அரசு முடிவு எடுத்துள்ளது.
இந்த மாற்றங்கள் 2021ல் தொடங்கி பொருளியல் நிலவரத்துக்கு ஏற்ப 10 ஆண்டுகளில் இடம்பெறும்.
முதல் கட்டமாக ஊழியர்கள் 60 வயது வரை முழு மசே நிதிச் சந்தா அனுகூலத்தைப் பெறுவார்கள். 60 வயதுக்குப் பிறகு சந்தா குறையத் தொடங்கும். 70 வயதுக்குப் பிறகு சரிசெய்யப்படும்.
அடுத்ததாக 2022ல் எல்லா ஊழியர்களுக்கும் வேலை ஓய்வு வயதும் மறுவேலை வாய்ப்பு வயதும் உயரத் தொடங்கும். 2022ல் பணி ஓய்வு வயது 62 லிருந்து 63 ஆகும். படிப்படியாக இது அதிகரித்து 2030ல் 65 ஆக உயர்த்தப்படும்.
1960 ஜூலை 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு 2022ல் பதவி ஓய்வு வயது கூடியிருக்கும். அதேபோல 1955 ஜூலை 1ல் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மறு வேலை வாய்ப்பு வயதும் உயர்ந்திருக்கும்.
மறுவேலை வாய்ப்பு வயது 2022ல் 67லிருந்து 68 ஆக உயரும். கடைசியில் 2030ல் மறுவேலை வாய்ப்பு வயது 70க்கு உயர்த்தப்படும். அதாவது, 2030ல் வேலை ஓய்வு வயது 65 ஆக இருக்கும். மறுவேலை வாய்ப்பு வயது 70 ஆக இருக்கும்.
முதிய ஊழியர்கள் தொடர்பான முத்தரப்புப் பணிக்குழு ஒன்றை மனிதவள அமைச்சு சென்ற ஆண்டு அமைத்தது. அந்தப் பணிக்குழு நான்கு முக்கிய பரிந்துரைகளைச் செய்துள்ளது. அவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இந்தத் திட்டங்களை நடப்புக்குக் கொண்டு வருகிறது.
ஓய்வு வயதை 65க்கு உயர்த்த வேண்டும். மறுவேலை வாய்ப்பு வயதை 70 ஆக உயர்த்தவேண்டும். முதிய ஊழியர்களுக்கு மத்திய சேம நிதிச் சந்தாவைக் கூட்டவேண்டும். இவை எல்லாவற்றையும் கட்டம் கட்டமாக 2030 வாக்கில் செய்து முடிக்க வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்து இருந்தது.
அரசாங்கச் சேவையில் ஓராண்டு முன்னதாக 2021ஆம் ஆண்டிலேயே வேலை ஓய்வு வயதும் மறுவேலை வாய்ப்பு வயதும் உயர்த்தப்படும் என்று தெரிவித்த பிரதமர், தனியார் துறை நிறுவனங்களும் இவ்வாறே செய்யலாம் என்று குறிப்பிட்டார்.
இந்த மாற்றங்கள் எல்லாம் முதிய ஊழியர்கள் தொடர்ந்து வேலை பார்க்கவும் சுதந்திரமாகச் செயல்பட போதிய பண பலத்தை அவர்கள் பெற்றிருக்கவும் உதவும் என்று திரு லீ தெரிவித்தார்.
மிக முக்கியமாக மத்திய சேம நிதியில் உரிய பணத்தை எடுத்துக்கொள்வதற்கான வயது எந்த மாற்றமுமின்றி 55 ஆகவே இருக்கும் என்று திரு லீ குறிப்பிட்டார்.
ஆகையால் இதன் தொடர்பிலான புரளி எதையும் அல்லது வாட்ஸ் அப் தகவல் எதையும் நம்பவேண்டாம். அவை எல்லாம் பொய் செய்திகள் என்று பிரதமர் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்களின் ஆயுள் உலகிலேயே ஆக அதிகமாக 84.8 ஆண்டாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய திரு லீ, சிங்கப்பூரர்கள் வேலையில்லாமல் அதிக காலத்தை ஓட்ட விரும்பவில்லை என்பது தெரியவந்திருப்பதாகவும் கூறினார்.
முதிய ஊழியர்கள் பல துறை அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் முதலாளிகள் தயங்காமல் வேலைகளைத் திருத்தி வடிவமைத்து முதியவர்களின் ஆற்றலையும் அனுபவத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திரு லீ, முதிய ஊழியர்களும் தங்களுக்கு 40 வயது ஆனதுமே புதிய திறன்களை இடைவிடாமல் கற்றுக்கொள்ளும் போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை பொறுத்தவரையில் அரசாங்கம் முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் முழு ஆதரவு தரும் என்று திரு லீ உறுதி கூறினார்.
இந்த ஏற்பாடுகளுக்கு நிறுவனங்கள் தங்களைச் சரிசெய்துகொள்ள அரசாங்கம் உதவும். அவற்றுக்கான ஆதரவு திட்டம் ஒன்றை அரசு நடைமுறைக்குக் கொண்டு வரும்.
இதன் தொடர்பிலான விவரங்களை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பார் என்றும் பிரதமர் திரு லீ தமது பேரணி உரையில் குறிப்பிட்டார்.

