தேசிய தினப் பேரணி உரை 2019 - உயர்கல்விக் கட்டணம் குறைகிறது; மாணவர்களுக்கு அரசாங்க உதவித் தொகை கணிசமாகக் கூடுகிறது

தேசிய தினப் பேரணி உரை 2019 - உயர்கல்விக் கட்டணம் குறைகிறது; மாணவர்களுக்கு அரசாங்க உதவித் தொகை கணிசமாகக் கூடுகிறது

2 mins read
fb05bba7-cc7f-47d7-b235-5e4a871591c3
-

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (SIT), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகம் (SUSS) இரண்டும் தங்களுடைய வருடாந்திர கல்விக் கட்டணத்தைக் குறைக்கும். பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் இதனைஅறிவித்தார். முழுநேர பொது பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு கட்டணம் $8,000 லிருந்து $7,500 ஆகக் குறையும்.

அதேவேளையில், பல்கலைக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், நன்யாங் நுண்கலைக் கழகம், லாசா கலைக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்க கல்வி உதவித்தொகை கணிசமான அளவுக்கு அதிகரிக்கப்படும்.

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்க தேவையான நிதி வளத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் படிப்பைத் தொடரலாம் என்று திரு லீ குறிப்பிட்டார். அவர்கள் படிப்பதற்குப் பணம் ஒரு பிரச்சினையாக இருக்கக் கூடாது என்று தெரிவித்த திரு லீ, தேவையான நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் இத்தகைய மாணவர்கள் தங்கள் கல்வியைத் திறம்பட கற்க முடியும் என்று கூறினார். ஒளிவுமறைவு இல்லாத, தகுதிக்கு முன்னுரிமை என்ற நிலையில் சிங்கப்பூரை நிலைநாட்டி வருவதற்கு இது அடிப்படை என்று திரு லீ தெரிவித்தார்.

ஆறு பல்கலைக்கழகங்களிலும் படிக்கின்ற மாணவர்களில் பண உதவி தேவைப்படுவோருக்கு அரசாங்க கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்படும்.

பொது பட்டப் படிப்பு பயில்வோருக்கு உரிய கட்டணத்தில் 75% வரை அந்தப் கல்வி உதவித்தொகை ஈடுசெய்யும்.

இப்போது இந்த அளவு 50% ஆக இருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார். அதிக கல்வி உதவித்தொகை கிடைப்பதால் எடுத்துக்காட்டாக கணினி அறிவியல் அல்லது பொருளியல் படிக்கும் மாணவருக்கு ஆண்டுக்கு $4,000க்குப் பதிலாக $2,000தான் செலவாகும். முழுக் கட்டணம் ஆண்டுக்குச் சுமார் $8,000 என்பது குறிப்பிடத்தக்கது.

பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணத்தில் 95% வரை உதவித்தொகை கிடைக்கும். உதவித்தொகையைப் பெறும் மாணவர்கள் ஆண்டுக்கு $150 மட்டும் செலுத்தினால் போதும். இப்போது அவர்கள் $600 செலுத்துகிறார்கள். முழு கட்டணம் $3,000 என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்பக் கல்விக் கழகம், நன்யாங் நுண்கலைக் கழகம், லாசா கலைக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த டிப்ளோமோ மற்றும் பட்டப் படிப்பு மாணவர்களுக்கும் அதிக கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

பலதுறைத் தொழிற்கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரில் ஆறு பேர் அரசாங்க கல்வி உதவித்தொகையைப் பெற தகுதி பெறுவார்கள். ஆகையால் நடுத்தர வருவாய்க் குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்களுக்கும் இதன்மூலம் நன்மை கிடைக்குமென்றார் திரு லீ.

இதனிடையே, நேற்றைய பேரணியில் கலந்துகொண்ட சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் டான் தியாம் சூன், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் தலைவர் சியோங் ஹீ கியாட் இருவரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டதை வரவேற்றார்கள்.