பாலர்பள்ளி கல்விச் செலவு மேலும் பல குடும்பங்களுக்கு குறையவிருக்கிறது. கூடுதல் மானியங்களுக்கான மாதாந்திர வருவாய் வரம்பை $7,500லிருந்து $12,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக மேலும் 30,000 குடும்பங்கள் அடுத்த ஆண்டு முதல் பாலர்பள்ளி மானியத்துக்குத் தகுதிபெறும்.
நடுத்தர காலப்போக்கில் முழுநேர பாலர்பள்ளிச் செலவு மாதம் $300 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிகளுக்குப் பிந்தைய மாணவர் பராமரிப்புக்கு ஆகும் செலவை ஒத்தது. பிரதமர் லீ சியன் லூங் தேசிய தினப் பேரணி உரையில் நேற்று இந்த விவரங்களை அறிவித்தார்.
சிங்கப்பூரர்களுக்கு வாழ்வில் நல்ல தொடக்கத்தை அளிக்கும் வகையில் தரமிக்க பாலர்பள்ளிக் கல்வியைக் கட்டுப்படியாகும் செலவில் மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது.
கட்டுப்படியாகக்கூடிய பாலர்பள்ளி கல்வி பற்றி பெற்றோர் கவலை அடைந்து இருப்பதாக மக்கள் செயல் கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
வீட்டை பொறுத்தவரையில் வீவக வீடு இருக்கிறது. சுகாதாரப் பராமரிப்பைப் பொறுத்தவரையில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. அதேபோல பாலர்பள்ளியைப் பொறுத்தவரையில் நல்ல தரமான அரசாங்க ஆதரவு பெற்ற வாய்ப்புகள் எல்லா சிங்கப்பூரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று திரு லீ தெரிவித்தார்.
எதிர்காலத்தில் 80 விழுக்காட்டு பாலர்பள்ளி இடங்கள் அரசாங்கம் ஆதரவு பெற்றவையாக இருக்கும். இன்று இந்த அளவு ஏறக்குறைய 50 விழுக்காடாக இருக்கிறது.
பாலர்பள்ளி கல்வி என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தில் பெரும் வேறுபாட்டை ஏற்படுத்த முடியும் என்பது ஆய்வு மூலம் தெரியவந்திருப்பதைச் சுட்டிய திரு லீ, இதன் காரணமாகவே அரசாங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே பாலர்பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தொடங்கியது என்றார். அதோடு மட்டுமின்றி அந்த வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும் வகையிலும் செலவு கட்டுப்படியாகும் வகையிலும் அரசாங்கம் பல ஏற்பாடுகளைச் செய்தது என்று தெரிவித்தார்.
குழந்தைப் பராமரிப்புக்கு அரசாங்கம் கணிசமான மானியத்தை வழங்கினாலும் பாலர்பள்ளி படிப்புக்கான செலவு குறைந்த வருமான, நடுத்தர வருமான குடும்பங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
முழுநேர பாலர்பள்ளி இடங்களும் 2012 முதல் இரண்டு மடங்காகி ஏறக்குறைய 180,000 ஆக உயர்ந்து இருப்பதையும் திரு லீ சுட்டினார். 3 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் இடம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
செங்காங், பொங்கோல் போன்ற புதிய குடியிருப்புப் பேட்டைகளில் வசிக்கும் இளம் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்குப் பாலர்பள்ளிகளில் விரைவாக இடம் கிடைப்பதே அதற்குக் காரணம்.
அரசாங்கம் பாலர் கல்விக்கு ஆண்டுக்கு $1 பில்லியனைச் செலவிடுகிறது. இது அடுத்த சில ஆண்டுகளில் இரண்டு மடங்கைவிட கூடும் என்றார் திரு லீ.
அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு ஆதரவு தரும் மேலும் பல யோசனைகளை இளைய அமைச்சர்கள் தீட்டி இருக்கிறார்கள் என்றும் அவற்றை உரிய நேரத்தில் தாம் அறிவிக்கப்போவதாகவும் திரு லீ தெரிவித்தார்.
இதற்-கி-டையே, பிறக்-கும் குழந்-தை-க-ளின் எண்-ணிக்-கை-யைக் கணக்-கிட்டு பிள்ளைகளின் எண்-ணிக்கையும் அதி-க-ரிக்-கும் என்று தான் நம்புவதாக பெரும் மகிழ்ச்-சிக் கர-வொ-லிக்கு இடையே திரு லீ தெரி-வித்-தார்.

