தேசிய தினப் பேரணி உரை 2019 - மூத்தோர் துடிப்புடன் வாழ கூட்டு முயற்சி

தேசிய தினப் பேரணி உரை 2019 - மூத்தோர் துடிப்புடன் வாழ கூட்டு முயற்சி

2 mins read
bc904194-44f4-4f74-8235-a812d27916f4
-

நூறு வயதைத் தாண்டி இருக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டைவிட இரு மடங்குக்கு மேலாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார். 2007ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 500 ஆக இருந்தது. இப்போது அது 1,300 ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் இப்போது சராசரியாக அதிக காலம் வாழ்கிறார்கள். உலக அளவில் பார்க்கையில் சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் 84.8 ஆண்டுகள் என உச்சத்தில் உள்ளது.

முதியோர் தங்கள் ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று திரு லீ, நேற்று ஆற்றிய தமது தேசிய தினப் பேரணி உரையில் கூறினார்.

"பெரும்பாலான சிங்கப்பூர் முதியோர் தொடர்ந்து வேலை செய்ய விரும்புவதால், அவர்கள் அதிக காலம் உயிர் வாழ்வதற்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நாம் அதிக காலம் ஆரோக்கியமாகவும் அதிக காலம் வாழ்வதற்கும் விரும்பலாம். ஆனால், பதவி ஓய்வு பெற்று அதிக ஆண்டுகள் வாழ சிங்கப்பூரர்கள் விரும்புவதில்லை.

"நான் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க நாம் துடிப்பு மிக்கவராகவும் பல நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்க விரும்புகிறோம்.

"மேலும் நமது ஓய்வுகாலத்துக்குப் போதிய அளவு சேமிக்க நம்மில் பெரும்பாலோர் அதிக முயற்சி எடுத்து வருகின்றனர். ஆக, நம்மில் பலருக்கு தங்கள் வாழ்க்கைப் பாதையில் பல்வேறு பணிகளைச் செய்து வந்துள்ளனர்," என்றும் பிரதமர் விவரித்தார்.

"ஆனால், முதியோர் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் அவர்களின் முதலாளிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முதலாளிகள் தங்கள் முதிய ஊழியர்களின் பயிற்சியை வடிவமைப்பதிலும் தொடர்ந்து உற்பத்தித் திறனுடன் அவர்களைப் பணியாற்ற செய்வதிலும் பங்களிக்க வேண்டும்.

"முதிய ஊழியர்கள் தங்களுடன் பணியாற்றும் இளைய ஊழியர்களைவிட வலுவாகவும் விரைவாகவும் செயல்பட முடியாது என்ற போதிலும், தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும் மறுவடிவமைக்கப்பட்ட வேலைகளில் இந்தப் பிரச்சினை இருக்காது," என்றும் திரு லீ விளக்கினார்.

"இதன் தொடர்பில் ஊழியர்களுக்கு சரியான மனப்போக்கு இருக்க வேண்டும். மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, புதியவற்றைக் கற்றுக்கொண்டு, வெவ்வேறு பொறுப்புகளைக் கையாள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

"பழைய வேலைகளைச் செய்து கொண்டு அதில் திருப்தியடையும் காலம் மறைந்துவிட்டது. காரணம், பல வேலைகள் மாற்றம் காணும். சில வேலைகள் மறைந்தே போய்விடும். ஆற்றல்களைப் புதுப்பித்துக்கொள்ளுதல் முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும். அதாவது ஊழியர்கள் 40 வயதுகளிலும் 50 வயதுகளிலும் அல்லது அதற்கு முன்னதாகவோ செய்யப்பட வேண்டும்.

"இதன் மூலம் அவர்கள் பதவி ஒய்வுக்காலத்தை நெருங்கும்போதே அவர்கள் கற்றுக்கொண்ட புதிய ஆற்றல்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவும். அவர்கள் 60 வயதைக் கடந்தும் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளலாம்," என்றார் பிரதமர் லீ.