வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதி: ‘ஷெல்’ அறிமுகம்

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியை ‘ஷெல்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூரில் மின்சார (DC) வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் சில்லறை விற்பனை எரிபொருள் நிறுவனம் எனும் பெருமையை ‘ஷெல்’ நிறுவனம் பெற்றுள்ளது.

பிரிட்டன், நெதர்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் உள்ள தனது எரிபொருள் விற்பனை நிலையங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ‘ஷெல்’, சிங்கப்பூரில் 61, செங்காங் ஈஸ்ட் ரோட்டில் செயல்பட்டு வரும் தனது எரிபொருள் விற்பனை நிலையத்தில் அந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இங்குள்ள 50 கிலோவாட் நேர் மின்சார அதிவேக மின்னூட்டி மூலம் மின்னாற்றலால் இயங்கும் வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்துகொள்ளலாம்.

‘ஷெல் ரீசார்ஜ்’ என அழைக்கப்படும் இந்த வசதி, வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் ஆறு நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

சிங்கப்பூரில் இப்போது 1,100 வாகனங்கள் மட்டுமே மின்சாரத்தால் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு சாலையில் இயக்கப்பட்டு வரும் மொத்த வாகனங்களுள் இது 0.1% மட்டுமே என நிலப் போக்குவரத்து ஆணையத் தகவல் கூறுகிறது.

ஒரு கிலோவாட் மின்னாற்றலுக்கு ‘ஷெல் ரீசார்ஜ்’ 55 காசு கட்டணம் வசூலிக்கிறது. இது, இங்குள்ள மற்ற சில அதிவேக மின்னூட்டி நிலையங்களில் வசூலிக்கப்படும் தொகையைவிட சற்று அதிகம் எனக் கூறப்படுகிறது.

இந்த 50 கிலோவாட் அதிவேக மின்னூட்டிகள் மூலம் மின்சாரத்தால் இயங்கும் காருக்கு அரை மணி நேரத்தில் முழுமையாக மின்னூட்டம் செய்ய இயலும்.

இணையம் வழியாக கடந்த மாதம் கருத்தாய்வு ஒன்றை ‘ஷெல்’ மேற்கொண்டது. அதில் பங்கேற்ற 18 வயதிற்கு மேற்பட்ட ஆயிரம் பேரில் நான்கில் ஒருவர் அடுத்த ஈராண்டுகளுக்குள் மின்சாரத்தால் இயங்கும் காரை வாங்க எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

‘ஷெல்’ சில்லறை விற்பனை பொது மேலாளரான திருவாட்டி ஆர்த்தி நாகராஜன் கூறுகையில், “மின்சார வாகனங்களுக்குப் போதிய அளவில், அதிவேகமாக மின்னூட்டம் செய்யும் வசதிகள் இல்லை என சிங்கப்பூரர்கள் கவலைப்படுவதை எங்களது ஆய்வுகள் காட்டின. அதனால்தான் ‘ஷெல் ரீசார்ஜ்’ வசதியை அறிமுகம் செய்துள்ளோம்,” என்றார்.

‘ஷெல்’லுக்குச் சொந்தமான ‘கிரீன்லாட்ஸ்’ நிறுவனம் இந்த அதிவேக மின்னூட்டச் சாதனங்களை அமைத்து வருகிறது.

‘சிங்கப்பூர் பவர்’ நிறுவனம் அடுத்த ஆண்டிற்குள் மின்சார வாகனங்களுக்கான ஆயிரம் மின்னூட்டச் சாதனங்களை அமைக்க இலக்கு கொண்டுள்ளது. 

அவற்றுள் 250, நேர் மின்சார அதிவேக மின்னூட்டச் சாதனங்களாக இருக்கும்.

மின்சார கார்களை வாடகைக்கு விடும் ‘புளூஎஸ்ஜி’ நிறுவனத்திற்குச்  சொந்தமான 99 மின்னூட்டச் சாதனங்களைப் பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.