காணாமல் போன சிங்கப்பூர் 'கயாக்' படகோட்டிகள் இருவரில் ஒருவரது சடலம் கிடைத்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒருவரைத் தேடும் பணியை நேற்று முன்தினம் இரவு 9 மணியுடன் மலேசியா கைவிட்டது.
திரு டான் எங் சூன், 62, அவருடைய துணைவியார் திருவாட்டி புவா கியோக் டின், 57, ஆகிய இருவரும் இம்மாதம் 8ஆம் தேதி ஜோகூரின் மெர்சிங் கடற்பகுதியில் படகோட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போயினர். ஆறு நாட்களுக்குப் பிறகு, கடந்த 14ஆம் தேதி திருவாட்டி புவா சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில், பத்து நாட்களாகத் தேடியும் திரு டான் கண்ணில் படாததை அடுத்து, அவரைத் தேடும் பணியைக் கைவிடுவதாக மலேசியா அறிவித்தது. ஆகாய வழியாகவும் கடல்வழியாகவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிக்கு 431,000 மலேசிய ரிங்கிட்டுக்கும் (S$143,045) மேலான தொகை செலவானதாகவும் அப்பணியில் 155 பேர் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவாட்டி புவாவின் இறுதிச் சடங்கு இன்று நடக்கவிருக்கிறது.

