முதிய ஊழியர்களின் மசேநி சந்தா விகித உயர்வு: ஆதரவை எதிர்பார்க்கும் நிறுவனங்கள்

முதிய ஊழியர்களின் மத்திய சேமநிதி (மசேநி) சந்தா விகித உயர்வினால் அதிகரிக்கவிருக்கும் தொழில் செலவுக்கு நிறுவனங்கள் ஆயத்தமாகிவரும் வேளையில், செலவு அதிகரிப்பின் பாதிப்பைத் தணிக்க அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் ஆதரவை எதிர்பார்க்கின்றன பல நிறுவனங்கள். 

ஆயினும், சந்தா விகிதம் 2021 முதல் பத்தாண்டு காலத்தில் படிப்படியாகவே உயரும் என்பதாலும் முதிய ஊழியர்களின் எண்ணிக்கை தத்தம் நிறுவனங்களில் குறைவாக இருப்பதாலும் அதிகரிக்கும் செலவைச் சமாளித்துவிடமுடியும் என்று சில நிறுவனங்கள் கூறுகின்றன. 

அனுபவமிக்க ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு இந்த மாற்றம் ஊக்கமளிக்கும் என்றும் அவை கூறின. குறிப்பாக, ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் தொழில்துறைகளுக்கு உதவியாக இருக்கும். 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நாள் பேரணியில் உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங், 55 முதல் 70 வயது வரையிலான ஊழியர்களின் மசேநி சந்தா விகிதம் 2021 முதல் படிப்படியாக உயர்த்தப்படும் என அறிவித்தார். ஊழியர்கள், முதலாளிகள் இருவரது பங்களிப்பு விகிதமும் உயர்த்தப்படுகிறது. 

முதிய ஊழியர்கள் கூடுதல் காலம் வேலை செய்யவும், நிதிச் சுதந்திரத்துடன் வாழவும் உதவும் பற்பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று பிரதமர் கூறினார். 

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேட்டி கண்ட ஐந்து தொழில்துறை தலைவர்களில் மசேநி சந்தா விகித உயர்வுக்கு ஆதரவளித்தவர்களில் ஒருவர் சாய் தியாம் மேன்டனன்ஸ் துப்புரவு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு எடி டான். இவரிடம் வேலை செய்யும் சுமார் 1,500 ஊழியர்களில் 60 விழுக்காட்டுக்கு மேலானோர் 55 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால் தொழில் செலவு உயரவிருக்கிறது. எனவே, தனது தொழிலுக்கு உதவியாக அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் ஏதாவது அறிவிப்புகள் வரும் என அவர் எதிர்பார்த்திருக்கிறார். 

“எங்களது பணி ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை ஏலக்குத்தகை மூலம் செய்யப்படுவதால், செலவு அதிகரிக்கும்போது, எங்கள் சேவையைப் பயன்படுத்தும் கட்டட உரிமையாளர்கள் போன்றவர்கள் அந்தச் செலவை ஏற்க நேரிடும்,” என்றார் அவர்.  ஆனால், அதிகரிக்கும் செலவால் தொழிலுக்குக் கூடுதல் பயன் கிடைக்காவிட்டால் அது ஒரு சுமையாகிவிடும் என சில நிறுவனங்கள் அக்கறை தெரிவிப்பதாக சிங்கப்பூர் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு டேவிட் டான் கூறினார். இதனால், முதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்கக்கூடும் என்றார் அவர். 

“அதிகரிப்பை நியாயப்படுத்த, முதிய ஊழியர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்,” என்றார் அவர். 

ஃபியூச்சரிஸ்டிக் ஸ்டோர் ஃபிக்ஸ்ச்சர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு டேவிட் லோ போன்ற வேறு சிலர், கூடுதல் செலவுகள் “சமாளிக்கக்கூடியதாக” இருக்கும் என நம்புகின்றனர். அவரிடம் வேலை செய்யும் சிங்கப்பூர் ஊழியர்களில் சுமார் 10 விழுக்காட்டினர் மட்டுமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 

இந்நிலையில், புதிய மசேநி விகிதம் முதுமைக்காலத்திற்குக் கூடுதலாகச் சேமிக்க உதவும் என சில ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், தங்கள் கைக்குக் கிடைக்கும் சம்பளம் குறைந்துவிடுமே என வேறு சிலர் கவலைப்படுகின்றனர். 

நிர்வாக உதவியாளரான 62 வயது மார்க்கஸ் லிம், தனது ஒன்பது வயது மகளின் கல்விக்காகக் கையில் அதிக பணம் கிடைப்பதை விரும்புகிறார். 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற மசெக மகளிர் அணியின் வருடாந்திர மாநாட்டில் திரு ஹெங் முக்கிய உரை நிகழ்த்தினார்.  சிங்கப்பூர் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாற்றங்களைப் பரிந்துரைத்தல், அவர்களை சமூக நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்க ஊக்குவித்தல் போன்றவை மசெக மகளிர் அணியின் முக்கிய பணிகள் என்றும் திரு ஹெங் வலியுறுத்தினார்.

15 Sep 2019

‘மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கொள்கைகள் தொடரும்’

ஜூரோங் புத்தாக்க வட்டாரத்தின் மாதிரி வரைபடம். படம்: ஜேடிசி

15 Sep 2019

95,000 புதிய வேலைகள் உருவாக்கப்படலாம்