16,000 போலி வாசனைத் திரவியப் பொருட்கள் பறிமுதல்

கிட்டத்தட்ட 800,000 வெள்ளி பெறுமானமுள்ள 16,000 போலி வாசனைத் திரவியப் பொருட்களையும் அழகு பொருட்களையும் தருவித்து வைத்ததன் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் போலிஸ் படையும் சிங்கப்பூர் சுங்கத்துறையும் கூட்டறிக்கை ஒன்றில் இதனை இன்று தெரிவித்துள்ளன.

ஜூலை 25ஆம் தேதி, 200க்கும் அதிகமான வாசனை மற்றும் அழகுப் பொருட்கள் சுங்கத்துறையினரின் கண்காணிப்பின்போது அகப்பட்டன. இந்த வழக்கை அவர்கள் சிஐடி எனப்படும் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு மாற்றினர். சிஐடி அதிகாரிகள் பின்னர் அந்தப் போலிப் பொருட்களைப் பறிமுதல் செய்து இதற்குப் பின்னணியில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களைக் கைது செய்தனர். தெம்பனீஸ் நார்த் டிரைவிலும் சன்வியூ ரோட்டிலும் போலிசார் 19 மணி நேரமாக நடத்திய சோதனைக்குப் பிறகு அந்தப் பெண்களைக் கைது செய்தனர். கைதான பெண்களில் ஒருவருக்கு 21 வயது, மற்றொருவருக்கு 23 வயது.

சொகுசு நிறுவனங்களின் போலி முத்திரைகளைக் கொண்ட அந்தப் பொருட்களை இங்குள்ள இணைய வர்த்தகத் தளங்களில் சந்தேக நபர்கள் விற்கத் திட்டமிட்டிருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

 

Loading...
Load next