மகனின் வெளிநாட்டுப் படிப்புச் செலவுக்கு 60% தருமாறு அப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

வளர்ந்த மகன் கனடாவில் பட்டம் படிப்பதற்கு 60% செலவை ஏற்கும்படி அப்பாவுக்குக் குடும்ப நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.  மகனுக்கு 21 வயதுக்கு மேலாக இருந்தாலும், பெற்றோரின் “கடமை எத்துடன் முடிவடைகிறது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை” நீதிமன்றத்திற்கு இருப்பதாக மாவட்ட நீதிபதி ஜின்னி டான் கூறினார். 

பலதுறைத் தொழில்கல்லூரியில் பட்டயம் பெற்றுள்ள அந்த மகன், மாதர் சாசனத்தின்கீழ் தமது 22வது வயதில் பராமரிப்புத்தொகை கோரி விண்ணப்பம் செய்திருந்தார். 21 வயதுக்கு மேலாகும் ஒரு பிள்ளையின் கல்விக்குப் பராமரிப்புத்தொகை அவசியமா என்பதைத் தீர்மானித்து, பராமரிப்புத்தொகையின் வழங்கீட்டுக்கு உத்தரவிட மாதர் சாசனம் வழிவகுக்கிறது.  ஆனால், தனது படிப்புக்கு அப்பாவே முழுப் பொறுப்பேற்கவேண்டும் என மகன் விண்ணப்பம் செய்திருந்தது “நியாயமற்றது” என்று மாவட்ட நீதிபதி டான் குறிப்பிட்டார். 

“மகனைப் பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர் இருவருக்கும் உள்ளது,” என்று கடந்த மாதம் தீர்ப்பளித்தபோது அவர் கூறினார். வருமான விகிதப்படி, மகனின் படிப்புச் செலவின் மீதி 40 விழுக்காட்டைத் தாயார் ஏற்கவேண்டும் என்றார் அவர். 

பராமரிப்புத்தொகை கோரிய மகனின் 54 வயது தாயார் தனிப்பட்ட முறையில் துணைப்பாட ஆசிரியராக வேலை செய்கிறார்.  இந்த மகனுக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவனது பெற்றோர் 2004ல் விவாகரத்து செய்தனர். அப்போது, மகனுக்கு அப்பா பராமரிப்புத்தொகை கொடுக்கத் தேவையில்லை என இணக்கம் காணப்பட்டது. அதன்பிறகு அப்பா மறுமணம் புரிந்தார். அவருக்கு வேறு இரண்டு மகன்கள் உள்ளனர். தாயார் மறுமணம் புரியாமல், மகனை ஆதரித்து வந்தார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் அடையாளம் காட்டப்படவில்லை. 

சென்ற ஆண்டு பலதுறைத் தொழில்கல்லூரியில் பட்டயம் பெற்ற மகன், வேலையில் சேர்வதற்குத் தனது மதிப்பெண்கள் போதவில்லை என்பதை உணர்ந்ததால், மேல்படிப்பு படிக்க முடிவெடுத்தார். 

ஆனால், உள்ளூர் பல்கலைக்கழகங்களின் செய்தித்துறை பட்டப்படிப்பு வகுப்பில் சேர்வதற்கு அவர் தகுதி பெறாததால், வெளிநாட்டில் படிக்க முடிவெடுத்தார். இருப்பினும், தனது மகன் “தனது சொந்த நோக்கத்திற்காகவே” வெளிநாட்டுக்குச் செல்வதாகவும், படிப்பதற்காக அல்ல என்றும் அப்பா “மிகவும் உறுதியாக நம்பியதாக” நீதிபதி குறிப்பிட்டார். 

தளவாட நிறுவனத்தின் தனி உரிமையாளரான அப்பாவுக்குப் பராமரிப்புத்தொகை வழங்க வசதி இருப்பதாகவும் நீதிபதி கண்டறிந்தார். 

இத்தீர்ப்பை எதிர்த்து அப்பா மேல்முறையீடு செய்கிறார். 

 

Loading...
Load next