ஏழு பேரை ஏமாற்றி 185,000 வெள்ளி பணத்தை வாங்கிய ஆடவர் மீது குற்றச்சாட்டு

முன்னாள் நிதி ஆலோசகராகப் பணியாற்றிய ஓர் ஆடவர் ஏழு பேரை ஏமாற்றி மொத்தம் 185,000 வெள்ளி பணத்தை வாங்கியதன் பேரில்  குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். 10 விழுக்காடு மற்றும் 20 விழுக்காடு ஈவுத்தொகையைக் கொடுக்கக்கூடிய எதிர்காலத்திற்கான சேமிப்புத் திட்டத்தை வழங்குவதாக  32 வயது டேனியல் ராஸ் ஹார்லந்து அவர்களை நம்ப வைத்தார்.

இதற்காக அவர் பத்திரங்களை மாற்றியமைத்து பாதிக்கப்பட்டவர்களைத் தனது வங்கிக் கணக்கிற்குப்  பணமாற்றம் செய்ய வைத்தார்.  அவர்கள் ஆளுக்கு 5,000 வெள்ளிக்கும் 80,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட தொகையை ஹார்லந்திற்குக் கொடுத்தனர்.  

ஹார்லந்து தனது  மோசடிக்காக  பிரூடென்ஷல்  நிறுவனத்தின்  ‘பிரூஇன்வெஸ்டர் கேரண்டி பிளஸ்’  திட்டத்திற்குரிய பத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்.   அந்நிறுவனத்தில் அவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணியாற்றியிருந்ததாக அவரது ‘லிங்ட்இன்’ பக்கம் காட்டுகிறது.

2017ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை ஹார்லந்து அந்தக் குற்றங்களைச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஈவுத்தொகை உண்மையைவிட அதிகமாக இருப்பதை மற்றவர்களை நம்ப வைக்கும் விதத்தில் நிதி ஆலோசகர் ஒருவர் பத்திரங்களை மாற்றியமைத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் புகாரைப் பெற்றதாக போலிசார் திங்கட்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஈவுத்தொகை அதிகமாக இருக்கும் என்ற பொய்யை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பணத்தை மாற்றியதாக போலிசார் கூறினர். ஏமாற்றப்பட்டவர்களில் இருவருக்கு 20 விழுக்காடு ஈவுத்தொகை வழங்கப்படும் என்று ஹார்லந்து உத்தரவாதம் அளித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மற்றவர்கள் 10 விழுக்காடு ஈவுத்தொகையைப் பெறுவர் என நம்பினர்.

கடந்த புதன்கிழமை, மத்திய போலிஸ் பிரிவினர் ஹார்லந்தைக் கைது செய்தனர்.  தற்போது அவர் 15,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 24ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகவேண்டும்.

ஏமாற்றுதல் தொடர்பான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவருக்குப் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்காகவும் அபராதம் விதிக்கப்படலாம்.