பெண்ணைத் தகாத முறையில் தொட்டதற்காக மருத்துவர் மீது புகார்

சளி, காய்ச்சல் பிரச்சினைக்காக மருத்துவரிடம் சென்ற மாது ஒருவர், சம்பந்தமே இல்லாமல் அந்த மருத்துவர் தமது மார்பகத்தை தொட்டதாக   நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். அந்த மாதின் உள்ளாடையைக் கீழே இழுத்து மார்பகத்தைத் தொட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிய சம்பந்தப்பட்ட அந்த மருத்துவரான டாக்டர் லுயி வெங் சுன்னை அம்மாதின் காதலன் தொலைபேசியில் அழைத்தார். அந்தச் செயலைத் தாம் செய்ததாக அந்த மருத்துவர் உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை. எனினும், உடல் உறுப்புகளைப் பரிசோதிக்க தேவையிருந்ததாக கூறிய லுயி, அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
ஓல்ட் ஏர்போர்ட் சாலை அருகே ஜாலான் திகாவில் அமைந்துள்ள ‘நார்த்ஈஸ்ட் மெடிக்கல் குரூப்’ மருந்தகத்தில் 2017ஆம் ஆண்டு நவம்பரில் 24 வயது மாதை மானபங்கம் செய்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்த்து லுயி, 46, வழக்கு விசாரணை கோருகிறார்.

அந்த மாதின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவரது அல்லது காதலனின் பெயர் வெளியிடப்படவில்லை.

நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற லுயின் வழக்கு விசாரணையின்போது அந்த மாதின் காதலன் சாட்சியம் அளித்தார். லுயி உடனான தொலைபேசி உரையாடலின்போது, அந்த மருத்துவர் மருத்துவ வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் தமது காதலியின் கல்லீரல், நுரையீரல், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பரிசோதிப்பதற்கான தேவை இருந்ததாகவும் கூறியதாக அவர் சொன்னார்.

“வெறும் சளி, இருமலுக்காக மருந்தகத்திற்குச் சென்ற எனது காதலியின் ஆடையை அகற்ற சொல்வதற்கான தேவையே இல்லை என்று  அந்த மருத்துவரிடம் நான் கூறினேன். வேலை முடிந்த களைப்புடன் எனக்கு பசியாக இருந்ததால் என்னைத் திருப்திபடுத்துவதற்கான காரணத்தைப் பற்றி யோசித்து ஓரிரு மணிநேரம் கழித்து மீண்டும் அழைக்கச் சொன்னேன்,” என்று அந்த மாதின் காதலன் நீதிமன்றத்தில் சொன்னார்.

சற்று நேரம் கழித்து அம்மருத்துவர் மீண்டும் தம்மை தொலைபேசியில் அழைத்ததாகவும் ஏற்கெனவே சொன்ன விளக்கத்தையே அவர் திரும்பக் கூறியதாகவும் அந்த மாதின் காதலன் சொன்னார்.

“சளி, இருமல், காய்ச்சலுக்காக மருந்தகத்திற்குச் எனது காதலியின் உடல் உறுப்புகளைப் பரிசோதிப்பதற்கான உண்மையான தேவை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி தேவை இருந்தாலும்கூட, பரிசோதனையைச் செய்ய அங்கு தாதி எவரும் இல்லாதது ஏன் என்று மருத்துவரிடம் கேட்டேன்,” என்று அவர் மேலும் விவரித்தார்.

“இதற்கு மேல் என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்?” என்று லுயி தம்மிடம் கேட்டதாக கூறிய அந்த மாதின் காதலன், அந்த மருத்துவரின் செயலுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தாம் கோரியதாக நீதிமன்றத்தில் கூறினார்.

மருத்துவரிடம் பேசி முடித்த பிறகு இந்த விவகாரம் குறித்து தமது காதலியிடம் பேசிய அந்த ஆடவர், பின்னர் போலிசிடம் புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் சஷி நாதன் லுயிவைப் பிரதிநிதிக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், லுயிவுக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.