மின்ஸ்கூட்டரால் மோதிய ஆடவருக்கு ஒரு வாரச் சிறை

மின்ஸ்கூட்டரால் மோதிய ஆடவருக்கு ஒரு வாரச் சிறை

1 mins read

கொன்டோமினிய குடியிருப்புப் பகுதியில் பணியில் இருந்த பாதுகாவல் அதிகாரி மீது கோபம் ஏற்பட்ட காரணத்தால், மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் மெல்ரிக் சூ வெய்வன் என்பவர், அவர் மீது அதை மோதிவிட்டதால் அந்த 68 வயது பாதுகாவல் அதிகாரி கீழே விழுந்துவிட்டார். இதன் விளைவாக அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

அந்த முதியவருடன் தகராற்றில் ஈடுபடவே சூ இந்தச் செயலைப் புரிந்தாலும் உரிய நேரத்தில் மின்ஸ்கூட்டரை அவர் நிறுத்த தவறியதால் அந்தப் பாதுகாவல் அதிகாரி மீது சாதனத்தை மோதிவிட்டார்.

உடனே சம்பவ இடத்தைவிட்டு செங்காங்கின் ரிவர்வேல் கிரசண்ட் பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு சூ தப்பிச் சென்றுவிட்டார்.

2017ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் செங்காங்கில் உள்ள காம்பஸ் ஹைட்ஸ் கொன்டோமினிய வளாகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

மூன்று நாட்கள் கழித்து போலிசார் 28 வயது சூவை மடக்கிப் பிடித்தனர்.

சம்பவம் நிகழ்ந்து ஒன்பது நாட்கள் கழித்து அந்தப் பாதுகாவல் அதிகாரி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது தலையில் காயம் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முன்யோசனையின்றி மின் ஸ்கூட்டரை ஓட்டி பாதுகாவல் அதிகாரிக்குக் காயம் விளைவித்ததற்காக சூவிற்கு நேற்று ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்திற்காக சூவிற்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.