ஐந்து வயது சிறுவனைத் தரையில் வீசிக் காயப்படுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

முதுகெலும்பிலும் நெஞ்சுப் பகுதியிலும் காயங்களை ஏற்படுத்தும் அளவிற்கு ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனை இருமுறை தரையில் வீசிய பணிப்பெண் ஒருவருக்கு நேற்று எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தோனீசியாவைச் சேர்ந்த அந்த 24 வயது பணிப்பெண், அச்சிறுவனைத் துன்புறுத்திய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இவ்வாண்டு மார்ச் 12ஆம் தேதி வீட்டிலிருந்து பந்தை எடுத்துக்கொண்டு பொங்கோலில் புளோக் 673C எட்ஜ்ஃபீல்ட் பிளேன்ஸ் எதிரே உள்ள திடலுக்கு அச்சிறுவன் ஓடினான். பின்னாலேயே அவனைத் துரத்திய அப்பணிப்பெண், அவனைத் தூக்க முற்பட்டார்.

அச்சிறுவனைத் தூக்க முயன்றபோது அவன் முரண்டு பிடித்ததால் சினமடைந்த பணிப்பெண், அவனை இருமுறை தரையில் வீசிவிட்டார். அதன் பின்னர் அவனைத் தூக்கிக் கொண்டு அப்பணிப்பெண் வீடு திரும்பினார். பிறகு தமக்கு நடந்தது பற்றி 34 வயது தாயாரிடம் அச்சிறுவன் எடுத்துக் கூறினான்.

ஆனால், அச்சிறுவன் பொய் சொல்வதாகக் கூறிப் பணிப்பெண் தப்பித்துக்கொண்டார். இருப்பினும் நடந்ததை நேரில் கண்ட பெண் ஒருவர், சம்பவத்தைக் காணொளியாகப் பதிவு செய்திருந்தார். 

 

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பரவ, இரு நாட்கள் கழித்து தற்செயலாக அதில் தம்முடைய மகனையும் பணிப்பெண்ணையும் அடையாளம் கண்டு அதிர்ச்சியடைந்த தாயார், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

சிறுவனைத் துன்புறுத்தியதற்காக அப்பணிப்பெண்ணுக்கு அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் $4,000  வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

Loading...
Load next