எழுவரை ஏமாற்றி $185,000 பணத்தை வாங்கிய ஆடவர்

முன்னாள் நிதி ஆலோசகராகப் பணியாற்றிய ஆடவர் ஒருவர், ஏழு பேரை ஏமாற்றி மொத்தம் $185,000 பணத்தைச் சுருட்டியதன் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். பத்து முதல் 20 விழுக்காடு வரை உறுதியான லாப ஈவுத்தொகையைக் கொடுக்கக்கூடிய எதிர்காலச் சேமிப்புத் திட்டத்தை வழங்குவதாக டேனியல் ராஸ் ஹார்லந்து, 32, அவர்களை நம்பவைத்தார். 

இதற்காக அவர் பத்திரங்களை மாற்றியமைத்து பாதிக்கப்பட்டவர்களைத் தமது வங்கிக் கணக்கிற்குப் பணம் மாற்றிவிட செய்தார். அவர்கள் ஒவ்வொருவரும் $5,000க்கும் $80,000க்கும் இடைப்பட்ட தொகையை ஹார்லந்திற்குக் கொடுத்தனர்.

ஹார்லந்து தமது மோசடிக்காக ‘புருடென்ஷியல்’ காப்புறுதி  நிறுவனத்தின்  ‘புருஇன்வெஸ்டர் கேரண்டி பிளஸ்’  திட்டத்திற்குரிய பத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.   

அந்நிறுவனத்தில் அவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பணியாற்றியிருந்ததாக அவரது ‘லிங்ட்இன்’ சமூக வளைத்தள பக்கம் காட்டுகிறது.

2017ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை ஹார்லந்து அந்தக் குற்றங்களை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஈவுத்தொகை உண்மை நிலைமையைவிட அதிகமாக இருப்பதாக மற்றவர்களை நம்பவைக்கும் விதத்தில் நிதி ஆலோசகர் ஒருவர் பத்திரங்களை மாற்றியமைத்திருப்பதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் ஒன்றைத் தான் பெற்றதாக போலிஸ் நேற்று முத்தினம் தனது அறிக்கையில் கூறியது.

ஈவுத்தொகை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட பொய்யை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் ஹார்லந்தின் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றிவிட்டதாக போலிசார் கூறினர். ஏமாற்றப்பட்டவர்களில் இருவருக்கு 20 விழுக்காடு ஈவுத்தொகை வழங்கப்படும் என்று ஹார்லந்து உத்தரவாதம் அளித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மற்றவர்கள், தாங்கள் 10 விழுக்காடு ஈவுத்தொகையைப் பெறுவர் என நம்பினர்.

மத்திய போலிஸ் பிரிவினர் கடந்த புதன்கிழமை ஹார்லந்தைக் கைது செய்தனர். தற்போது அவர் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 24ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.

Loading...
Load next