வீவக வீட்டு விற்பனை திட்டம் ஒத்திவைப்பு

இந்த மாதம்  நடைபெறுவதாக இருந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நடவடிக்கை அடுத்த மாதத்திற்குத் தள்ளிப்போடப்பட்டு உள்ளது.

எனவே வீடுகளை வாங்குவோர் ஒரு மாதமோ அதற்கு மேற்பட்ட காலமோ காத்திருக்க வேண்டி இருக்கும்.

வீடுகளை வாங்க விரும்புவோர் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட இருக்கும் மாற்றங்களின் மூலம் பலனடைவதற்கு வசதியாக விற்பனை நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

“புதிய, மறுவிற்பனை வீடுகளை முதல்முறை வாங்குவோருக்கான ஆதரவை எவ்வாறு நீட்டிக்கலாம்  என தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் ஆராய்ந்து வருகின்றன. 

“இது தொடர்பான மேல் விவரங்களை அடுத்த மாதம் தெரிவிப்பேன்,” என்று அமைச்சர் வோங் குறிப்பிட்டுள்ளார்.

வீடு வாங்குவோருக்கு உதவும் வகையில் அண்மையில் பல்வேறு கொள்கை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. மறுவிற்பனை வீடுகளுக்கான வீடமைப்பு மானியத்தை அதிகரிப்பது, குறைந்த காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் போன்றவை அவற்றில் அடங்கும். “இந்த மாற்றங்கள் கட்டு படியாகக் கூடிய விலையில் வீட்டு  வசதியை மேம்படுத்தியதோடு இளம் குடும்பங்கள் தங்களுக்கான வீடுகளை முன்கூட்டியே பெற உதவி உள்ளன,” என்று அமைச்சர் தமது பதிவில் கூறியுள்ளார்.
 

Loading...
Load next