சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் திங்கட்கிழமை பிற்பகல் தீ மூண்டதைத் தொடர்ந்து நோயாளிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 70 பேர் வெளியேற்றப்பட்டனர்.
1 ஹாஸ்பிடல் டிரைவிலுள்ள அந்த மருத்துவமனையின் புளோக் 2-ன் ஒன்றாம் சுரங்கத்தளத்தில் நடந்த தீச்சம்பவம் குறித்து பிற்பகல் 1.50 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. தீயினால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் குடிமைத் தற்காப்புப் படையினர் 70 பேரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர்.
சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தீச்சம்பவத்திற்கான காரணத்தைத் தொடர்ந்து ஆராய்வதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் 'ஸ்கேனர்' கருவியின் உள்ளிருந்த மின்சாரப் பாகம், அளவுக்கு மீறி சூடேறியதால் அந்தத் தீ மூண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்மூலம் தெரிய வந்ததாக மருத்துவமனையின் தலைமை செயலாக்க அதிகாரி டான் ஜக் தியாங் கூறினார்.
பழுதான ஸ்கேனர் உடனே மூடப்பட்டதாகத் திரு டான் தெரிவித்தார். ஸ்கேனர் இருந்த பிரிவைச் சேர்ந்த நோயாளிகள் மற்ற ஸ்கேனர்களைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை செய்ததாகவும் அவர் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து புகை கலைக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட கட்டடத்திற்குள் நுழைய குடிமைத் தற்காப்புப் படையினர் அனுமதி தந்ததாக அவர் கூறினார். சில நோயாளிகளின் ஸ்கேன்கள் வேறொரு நேரத்திற்கு மாற்ற மருத்துவமனை ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார்.
"இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்," என்றார் திரு டான்.

