அதிகமான பிள்ளைகளுக்கு மதியிறுக்கம்: பள்ளி இடங்களுக்கான தேவை அதிகரிப்பு

2 mins read
3b78757a-6144-4a98-bd61-0d5136a34902
-

சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் மதியிறுக்கப் (autism) பிரச்சனை இருப்பதாகக் கண்டறியப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பள்ளி இடங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. "ஆட்டிஸம்" எனப்படும் மதியிறுக்கப் பிரச்சனையுள்ள ஆறு வயது வரையிலான பிள்ளைகளின் எண்ணிக்கை ஆண்டுக்குச் சுமார் 15 விழுக்காடு அதிகரிப்பதாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

முன்பைவிட இப்போது பெற்றோர்கள் அதிகம் படித்திருப்பதால், இப்பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இதற்கான காரணங்களில் ஒன்று என வல்லுநர்கள் கூறுகின்றனர். பிள்ளைகளின் வளர்ச்சி மேம்பட்ட முறையில் கண்காணிக்கப்படுவதால், மிதமான மதியிறுக்கப் பிரச்சனையும் இப்போது எளிதில் கண்டறியப்படுவதாகச் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

இதனால், மதியிறுக்கத்திற்குக் கவனிப்பளிக்கும் பள்ளிகளின் இடங்களுக்குத் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, பாத்லைட், ஈடன் ஆகிய பள்ளிகள் விரிவடையத் திட்டமிடுகின்றன. பாத்லைட் பள்ளி தெம்பனிஸில் கட்டவிருக்கும் இரண்டாவது வளாகம் 2023ல் திறக்கப்படவுள்ளது. இதில் தொடக்கநிலைக் கல்வி பயில 500 பிள்ளைகளுக்கு இடம் இருக்கும்.

தற்போது அங் மோ கியோவிலுள்ள பாத்லைட் பள்ளி வளாகத்தில் ஏற்கனவே 1,456 தொடக்கநிலை, உயர்நிலை மாணவர்களுக்கு இடமிருக்கிறது. பாத்லைட் பள்ளி 2004ஆம் ஆண்டு 41 மாணவர்களுடன் திறக்கப்பட்டதிலிருந்து, மாணவர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதாகப் பள்ளி முதல்வர் லிண்டா கூ தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் மாணவர் எண்ணிக்கை 10 முதல் 15 விழுக்காடு கூடியது.

அதேபோல, ஏழு முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கான ஈடன் பள்ளியும் இரண்டாவது வளாகத்தைக் கட்டுகிறது. புக்கிட் பாத்தோக்கில் உள்ள இப்பள்ளி, அதே வட்டாரத்தில் விரிவடைகிறது. புதிய வளாகம் 2021 ஜனவரியில் தயாராகிவிடும். அதில் 300 முதல் 350 பிள்ளைகளுக்கு இடமிருக்கும்.

ஈடன் பள்ளி அதன் தற்காலிக அங் மோ கியோ வளாகத்தில் கூடுதல் வகுப்புகளும் நடத்துவதாகப் பள்ளி முதல்வர் பெட்ரீஷியா செங் கூறினார்.

செயின்ட் ஆன்ட்ரூஸ் ஆட்டிஸம் பள்ளியில் 2016 முதல் மாணவர் சேர்ப்பு ஆண்டுக்கு 13 விழுக்காடு கூடி வருகிறது. தற்போது இப்பள்ளியில் 287 மாணவர்கள் பயில்கின்றனர். அடுத்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 312 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் விழிப்புணர்வும் மேம்பட்ட நோயறிதல் நடைமுறையும் வளர்ச்சியடைந்த நாட்டின் அடையாளங்கள் என்று தேசிய நரம்பியல் கழகத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் இவ்லீன் கோ கூறினார். ஆயினும், மதியிறுக்கத்திற்கு மற்ற காரணங்களும் இருப்பதாகவும், அவற்றை முற்றிலும் நிராகரித்துவிட முடியாது என்றும் டாக்டர் கோ குறிப்பிட்டார். கர்ப்பகாலத்தின்போது மருந்து சாப்பிடுதல், சுற்றுப்புறக் காரணங்கள், உணவுமுறை, வயது மூத்த பெற்றோருக்குப் பிள்ளைகள் பிறத்தல் ஆகியன அவற்றுள் அடங்கும்.