குத்துச்சண்டை வளையத்தில் வாழ்க்கையை உருமாற்றும் 67 வயது பயிற்றுவிப்பாளர்

குத்துச்சண்டை வளையத்தில் வாழ்க்கையை உருமாற்றும் 67 வயது பயிற்றுவிப்பாளர்

2 mins read
52a62cca-9e1b-4560-ab9f-6ddb91922917
-

புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவிலுள்ள ஒரு குன்றின் உச்சியில் திறந்தவெளி முவே தாய் பயிற்சிக்கூடம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

"ஹில்டாப் முவே தாய்" பயிற்சிக்கூடத்தை அமைத்த திரு இயோ லாய் ஹுவாட், 67 வயதிலும் வலு குறையாமல் சண்டைப்பயிற்சி அளிக்கிறார்.

தனது மனைவியுடன் தாமான் ஜூரோங்கில் வசிக்கும் திரு இயோ, வாரநாள் மதிய வேளைகளில் நான்கு பேரப்பிள்ளைகளைக் கவனித்துக் கொள்கிறார். ஆனால் இரவு 8 மணியிலிருந்து 10.30 மணிவரை, சராசரியாக 15 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு முதல் ஐந்து மணிநேரம் சொந்தமாகப் பயிற்சி செய்வார்.

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த திரு இயோ, பல ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்.

"நான் உடற்பயிற்சி செய்வதால், அவ்வளவு எளிதில் நோய்வாய்ப்படுவதில்லை. அதோடு, அதிக தெம்பாகவும் இருக்கிறது," என்றார் திரு இயோ.

"மாஸ்டர் ஜானி" அல்லது "ஷீஃபூ" என பிரியமாக அழைக்கப்படும் திரு இயோ, வழிதவறிப் போகக்கூடிய நிலையிலுள்ள இளையர்களுக்கு வழிகாட்டவும் கடந்த முப்பது ஆண்டுகளாக முவே தாய் பயிற்சியைப் பயன்படுத்தி வருகிறார்.

சில மாணவர்கள் தவறான காரணங்களுக்காகத் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்புவதாகத் திரு இயோ கூறினார். உதாரணமாக, மற்றவர்களுடன் சண்டை போடுவதற்காக இவரிடம் பயிற்சிபெற சில இளையர்கள் வருவதுண்டு.

"இவர்கள் பலவீனமான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். மோசமானவர்கள் அல்ல. எனது இளவயதில் எனக்கு வழிகாட்ட யாருமில்லாதபோது இதேபோன்ற அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டதால், இவர்களுக்கு உதவ விரும்புகிறேன்," என்றார் அவர்.

பதின்ம வயதில் முன்கோபக்காரராக இருந்த திரு இயோ, தனது சிறிய உருவத்தினால் மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் அற்பக் காரணங்களுக்காகச் சண்டையிட்டதாகத் தெரிவித்தார்.

உயர்நிலை 2க்குப் பிறகு படிப்பை நிறுத்திய அவர், ஒரு கட்டத்தில் தனிப்பட்ட பாதுகாவலராகவும் வேலை செய்திருக்கிறார். அவர் 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவராக இருந்தபோது, தாய்லாந்து நண்பர் ஒருவர் முவே தாயை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.

மூன்று ஆண்டுகாலம் சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையில் பயணித்து பயிற்சி பெற்றார் திரு இயோ. அதோடு, இரு மாதங்களுக்கு ஒருமுறை தாய்லாந்தில் குத்துச்சண்டை போட்டிகளிலும் பங்கெடுத்தார்.

முவே தாய் வன்முறையல்ல என்றும், அது ஒரு வகையான விளையாட்டு என்றும் வலியுறுத்தும் திரு இயோ, அன்பாகவும், மரியாதையாகவும், தன்னடக்கத்தோடும் இருப்பது முக்கியம் என்றார்.

தனது மாணவர்களில் பலரும் பல்வேறு துறைகளில் வெற்றியடைந்திருப்பது தனக்கு மனநிறைவளிப்பதாகவும் திரு இயோ கூறினார்.