ஆணையம் எச்சரிக்கை: வாட்ஸ்அப்பில் வலம் வரும் மோசடி

வாட்ஸ்அப்பில் வலம் வரும் மோசடி குறித்து சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரித்துள்ளது.

அத்தகைய மோசடி வலையில் வீழ்ந்துவிடாதீர்கள் என்றும் ஃபேஸ்புக் மற்றும் இணையத் தளத்தில் வெளியிட்ட தகவலில் அது கேட்டுக்கொண்டது. அண்மைய காலமாக வாட்ஸ்அப்பில் “Inland Revenue Authority of Singapore-Refund-Online-Confirmation” என்று தலைப்பு இடப்பட்ட படம் ஒன்று வலம் வருகிறது. 

அதில் அதிகபட்சமாக வசூலிக்கப்பட்ட $236.51ஐ பெற்றுக்கொள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் அதிகாரபூர்வ சின்னமும் அந்தப்படத்தில் இடம்பெற்று உள்ளது.

ஆனால் இது ஒரு மோசடி என்றும் $236.51 திருப்பியளிக்கப் படுவதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் ஆணையம் கூறியுள்ளது. 

பின்னர் காலம் கடந்துவிட்டதாகவும் படிவத்தில் உள்ள தகவல்கள் சரியாக இல்லை  என்றும் கூறி கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரியைத் திருப்பி யளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று மின்அஞ்சலில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் ‘ஜிமெயில்’, ‘ஹாட்மெயில்’ போன்ற தனிப்பட்ட மின்அஞ்சல் மூலமாக அனுப்பப்படுவதில்லை என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் நினைவூட்டியது.

அதே சமயத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை ஆணையம் கேட்டுப் பெறுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சில வேளைகளில் வருமான வரித் துறை அதிகாரிகளைப் போல மோசடிக்காரர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதால் அதிலும் எச்சரிக்கையாக இருக்கும்படி சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Loading...
Load next