கூட்டாகத் திருடிய தாய்க்கும் மகளுக்கும் சிறை

தாயும் மகளும் ஒன்றாகச் சேர்ந்து கடைகளில் திருடியவர்களுக்கு நேற்று தலா பத்து நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

உள்ளாடை முதல் காலணி வரை சுமார் $1,000 மதிப்புள்ள பொருட்களை அவர்கள் திருடியுள்ளனர்.

வேலையில்லாத ஃபோங் லியோக் மோய், 68, வோங் புவே யீ, 41, ஆகிய இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட திருட்டுக்குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

இருவருக்கும் தண்டனை விதித்தபோது அவர்கள் மீது சுமத்தப்பட்ட மற்ற ஏழு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார்.

2017ஆம் ஆண்டில் விஸ்மா அட்ரியா கடைத் தொகுதியில் உள்ள ‘ஃபிட்ஃபிளாப்’ கடைக்கு ஜோடியாகச் சென்ற இருவரும் 300 வெள்ளி மதிப்புள்ள இரண்டு ஜோடி காலணிகளை திருடினர்.

ஒருவாரம் கழித்து அதே கடைக்கு அவர்கள் சென்றனர். ஆனால் கடந்த முறை காலணிகள் காணாமல் போனதால் கடைக்காரர்கள் விழிப்புடன் அவர்களைக் கண்காணித்தனர். மேலும் போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இருவரையும் சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கணக்கில் வராத பல பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் ‘விக்டோரியா சீக்ரெட்’ கடையிலும் ‘காட்டன் ஆன்’ கடையிலும் திருடப்பட்ட உள்ளாடைகளும் காலணிகளும் அவர்களிடம் இருந்தன.

விசாரணையில் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பல கடைகளில் திருடியதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். 

இதற்கிடையே நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் டி.எம். சின்னதுரை, இருவருக்கும் தலா இரண்டு நாள் சிறைத் தண்டனையும் 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கும்படி கேட்டுக் கொண்டார். 

ஆனால் தங்களுடைய திருட்டுச் செயல்களுக்கு வருந்தாத இருவருக்கும் நீதிபதி தலா 10 நாள் சிறைத் தண்டனை விதித்தார்.

Loading...
Load next