கட்டடத்திலிருந்து விழுந்து முதியவர் மரணம்; மனைவி மாரடைப்பால் மரணம்

தோ பாயோ ஈஸ்ட்டில் ஒரு முதியவர் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார். 

தோ பாயோ ஈஸ்ட்டின் புளோக் 26ன் கீழ்த்தளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாகச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) காலை 10.17 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் புதன்கிழமை தெரிவித்தனர். 

அந்த 84 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. 

இதற்கிடையே, அவர் கீழே விழுவதை நேரில் பார்த்த அவரது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பிற்பாடு அவர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக லியன்ஹ வான்பாவ் செய்தித்தாள் புதன்கிழமை செய்தி வெளியிட்டது. 

அதே கட்டடத்தில் காலை 11.25 மணியளவில் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அழைக்கப்பட்டதாகவும், அந்நபர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் த நியூ பேப்பரிடம் தெரிவித்தார். 

இந்தத் தம்பதியர் கட்டடத்தின் 10வது மாடியில் வசித்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பதாகவும், சுமார் 30 வயது மதிக்கத்தக்க கடைசி மகள் தனது பெற்றோருடன் அந்த மூவறை வீட்டில் வசித்து வந்ததாகவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருவாட்டி மீரா ஜமிரா கூறினார். 

நட்பாகவும் அன்பாகவும் பழகிய அந்தத் தம்பதியர் மிகவும் நல்ல அண்டைவீட்டார்கள் என்றார் திருவாட்டி மீரா. உயிரிழந்த முதியவர் ஒவ்வொரு நாளும் காலையில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Loading...
Load next