ரயில் துறைக்கு விரைவான மனிதவள மேம்பாடு தேவை

ரயில் துறைக்கு விரைவான மனிதவள மேம்பாடு தேவை

2 mins read

ரயில் தொழில்துறையின் உருமாற்றத்தை வேகப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி நேற்று தெரிவித்தார்.

எம்ஆர்டி கட்டமைப்பு அதிவேகமாக விரிவடைந்து வருவதே இதற்குக் காரணம் என்றார் அவர்.

அடுத்த 10 ஆண்டுகளில் பல புதிய ரயில் வழித்தடங்கள் வரவிருக்கின்றன. அதையொட்டி அதிகாரிகள் மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களின் தொடர்பில் ரயில் நிறுவனங்களோடும் தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தோடும் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பணி, இந்த ஆண்டின் பிற்பகுதியில் பூர்த்தியாகும் என்றும் டாக்டர் ஜனில் கூறினார். அடுத்த 10 ஆண்டுகளில் புதிய வழித்தடங்கள், புதிய சேவைகள், புதிய சேவைத் தரங்கள் உள்ளிட்ட பலவும் இடம்பெற இருப்பதால் 2,000 பேருக்கும் அதிகமான புதிய பொறியாளர்களும் தொழில் நிபுணர்களும் தேவைப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

டாக்டர் ஜனில், நிலப் போக்குவரத்துத் தொழில்துறை தினத்தில் உரையாற்றினார். அரசாங்கப் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துச் சேவைகளை நடத்துவோர், தொழிற்சங்கங்கள், தொழில்துறை அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 300 பேர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

இந்தத் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் அதிக ஈடுபாட்டையும் வலுவான பங்காளித்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில் அந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தொழிற்சங்க இயக்கம், இந்தத் தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் அரசாங்கம் கொண்டுள்ள பங்காளித்துவ உறவு காரணமாக தொழில்துறை உருமாற்ற முயற்சிகளுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

அந்த அடிப்படைகள் காரணமாக, நிறுவனங்கள் தலைசிறந்த நடைமுறைகளைக் கைக்கொண்டு அவற்றின் வழி பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் நலன்களைச் சிறப்பான முறையில் பாதுகாக்கும் என்றும் டாக்டர் ஜனில் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தகைய பாணியிலான அணுக்கமான ஒத்துழைப்பை நிலப் போக்குவரத்துத் துறையின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

நிலப் போக்குவரத்துத் தொழில்துறையின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் புத்தாக்க வழிகளைக் கண்டறிந்த மூன்று நிறுவனங்கள் நேற்றைய நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டன.

'அசெண்டியம்' என்ற உள்ளூர் நிறுவனம், 'சைலண்டியம்' என்ற இஸ்ரேலிய நிறுவனம்,' கார்மன் ஆட்டோமோட்டிவ்' என்ற சிங்கப்பூர் நிறுவனம் ஆகியவை சிறப்பிக்கப்பட்டன.

நிலப் போக்குவரத்துத் துறையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குப் புத்தாக்க தீர்வுகளைக் காணும்படி சிறிய, நடுத்தர நிறுவனங்களை ஊக்கப்படுத்த நேற்று ஒரு புதிய செயல்திட்டமும் தொடங்கப்பட்டது.