'சாங்கி கோடீஸ்வரர்' பரிசுத் திட்டத்தில் பரிசு கிடைத்திருப்பதாகச் சொல்லி 'வைபர்' என்ற செயலியில் வங்கிக் கணக்கு விவரங்களை யாராவது கேட்டால் கவனமாக இருந்துகொள்ளுங்கள். அப்படி வரும் அழைப்புகள் மோசடிகளாக இருக்கும் என்று சாங்கி விமானநிலையக் குழுமம் எச்சரித்து இருக்கிறது.
'வைபர்' செயலி மூலம் இத்தகைய மோசடி நடந்து இருப்பதாக ஒன்பது புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாங்கி கோடீஸ்வரர் ஆகுங்கள் என்ற இயக்கம் பற்றிய விளம்பரப் படத்துடன் 'வைபர்' செயலியைப் பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் செயல்படுகிறார்கள்.
அத்தகைய அழைப்புகளுக்குப் பதிலளித்தால், பரிசு கிடைக்க வேண்டுமானால் பல விவரங்களைத் தெரியப்படுத்துங்கள் என்று மோசடி பேர்வழிகள் பல கேள்விகளைக் கேட்பார்கள். மோசடிக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள இந்தக் குழுமம், சந்தேகமான அழைப்பு யாருக்காவது வந்தால் அவர்கள் 96585945 என்ற எண் மூலம் அல்லது millionaire@changiairport.com என்ற முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

