கள்ள சிகரெட்டை வைத்திருந்தது, அவற்றைக் கையாண்டது உள்ளிட்ட பல குற்றச்செயல்களுக்காக வீரப்பன் விமல்ராஜ், 33, என்ற இந்திய நாட்டவருக்கு ஏறக்குறைய இரண்டாண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.
அந்த நபர், தீர்வை செலுத்தப்படாத 14,130 சிகரெட் பொட்டலங்களை வைத்திருந்ததாகவும் கையாண்டதாகவும் $120,670 தீர்வையையும் $8,900 ஜிஎஸ்டி வரியையும் அவர் செலுத்தவில்லை என்றும் சுகாதார அறிவியல் ஆணையமும் சிங்கப்பூர் சுங்கத்துறையும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
அதோடு, $24,000 மதிப்புள்ள 12,180 புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக அவர் வைத்திருந்தார். வாயில் போட்டு மெல்லக்கூடிய அந்தப் புகையிலை இங்கு தடை செய்யப்பட்டு உள்ளது. மே மாதம் 21ஆம் தேதி நேத்தல் ரோட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கள்ள சிகரெட்டுகளும் புகையிலைப் பொட்டலங்களும் பிடிபட்டன. அருகே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஒரு காரில் இருந்து அந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அந்தக் காரைப் பயன்படுத்தி வீரப்பன் வாடிக்கை யாளர்களுக்கு அந்தப் பொருட்களைக் கொண்டு கொடுத்து வந்தார். காரும் $5,927 ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. அவருக்கு மொத்தம் 19 மாதம் 11 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

