கணக்குப் பதிவியல் துறைக்கு மின்னிலக்க வழிகாட்டி நெறிமுறை

சிங்கப்பூரின் கணக்குப் பதிவியல் தொழில்துறையைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைத் தழுவிக்கொண்டு அதிக உற்பத்தித்திறனையும் போட்டித்திறனையும் வளர்த்துக்கொள்ள உதவுவதற்காக ஒரு வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

‘கணக்குப் பதிவியல் தொழில்துறை மின்னிலக்கத் திட்டம்’ என்று குறிப்பிடப்படுகின்ற அந்த வழிகாட்டி நெறிமுறை, இத்தகைய நிறுவனங்கள் மின்னிலக்கமயத்திற்கு மாறிக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. 

பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாவது நிதி அமைச்சருமான இந்திராணி ராஜா நேற்று இந்த விவரங்களை அறிவித்தார். கணக்குப் பதிவியல் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 98 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னிலக்கமயம், புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக பொருளியலின் வடிவமே மாறுகிறது என்றும் இந்தச் சூழலில் ஏற்படக்கூடிய சவால்களைச் சமாளிக்கும் வகையில் கணக்குப் பதிவியல் தொழில்துறையினர் தங்களுடைய ஆற்றல்களை மிகவும் விரைவாக மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்று குமாரி இந்திராணி ராஜா வலியுறுத்தினார். 

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளைத் தழுவிக்கொள்ள உதவியாக சென்ற ஆண்டு $2.4 மில்லியன் செயல்திட்டம் தொடங்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு உதவ புதிய வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்பட்டு உள்ளது.