சிங்கப்பூர் மாதின் கணவர் தாய்லாந்தில் கொலையுண்டார்

தாய்லாந்தின் புக்கெட் மாநிலம், கரோன் நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது இன்னொரு விருந்தாளியுடன் ஏற்பட்ட சண்டையில் சிங்கப்பூர் மாது ஒருவரின் கணவர் கொல்லப்பட்டார்.

அமித்பால் சிங் பஜாஜ், 34, 

எனும் அவர் பிரிட்டிஷ் குடிமகன் எனத் தெரிவிக்கப்பட்டது.

விடுமுறையைக் கழிப்பதற்காக மனைவி பந்தனா கவுர் பஜாஜ், மகன் வீர் சிங்குடன் புக்கெட் சென்றார் திரு அமித். அங்கிருந்த விடுதியில் தங்கியிருந்தபோது, ரோஜர் புல்மன், 54, எனும் நார்வே நாட்டு ஆடவருக்கும் திரு அமித்துக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் திரு அமித் கொல்லப்பட்டார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவம் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு எழுத்து மூலம் விவரித்தார் திருவாட்டி பந்தனா.

தங்களது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்த அறையில் இருந்து பெண் ஒருவரின் அலறலையும் ஆடவர் ஒருவர் கத்தியதையும் கேட்டதாகவும் ஆயினும், அது குடும்பத்தினரின் தனிப்பட்ட விவகாரமாக இருக்கும் என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

பின் அதிகாலை நான்கு மணி அளவில் மாடி முகப்புக் கதவில் இருந்து சத்தம் வரவே, தம் கணவரை அவர் எழுப்பினார்.

“திடீரென எங்களது அறைக்குள் புகுந்த புல்மன், என் கணவரைத் தாக்கத் தொடங்கினான். நாங்கள் வெளியேற முயன்றபோதும் அவன் ஓடிவந்து என் கணவரை அடித்தான்.  அதைத் தடுத்து, என் மகனை அங்கிருந்து வெளியேற்ற என் கணவர் முற்பட்டார். ஆயினும், அவன் தாக்குதலை நிறுத்தவில்லை. அதையடுத்து, அவ்விடத்தைவிட்டு வெளியேறி மகனைக் காப்பாற்றுமாறு என் கணவர் என்னிடம் கூறினார்,” என்றார் திருவாட்டி பந்தனா.

தாம் அறையைவிட்டு வெளியேறியபோது, தம் கணவர் கீழே விழுந்ததைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்தபடி, ஹோட்டலின் வரவேற்பறைக்குத் தொலைபேசி வழி தொடர்புகொண்டதாக அவர் குறிப்பிட்டார். தங்களுக்காக உயிர்த் தியாகம் செய்த தம் கணவர்தான் என்றுமே தங்களின் கதாநாயகன் என்றும் அவர் சொன்னார்.

போதையில் இருந்ததாகக் கூறப்பட்ட புல்மன் கைது செய்யப்பட்டு, புக்கெட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று அறியப்படுகிறது.

Loading...
Load next