போதைப் புழங்கிகள் 110 பேர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கடந்த 19ஆம் தேதியிலிருந்து நேற்று வரை தீவு முழுவதும் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் புழங்கியதாக சந்தேகத்தின்பேரில் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்தச் சோதனைகளின்போது 1,274 கிராம் ‘ஐஸ்’, 218 கிராம் ஹெராயின், 173 கிராம் கஞ்சா, 133 கிராம் புதிய வகை ‘சைக்கோஆக்டிவ்’ போதைப்பொருள், ஐந்து கிராம் கீட்டமீன், 506 ‘எக்ஸ்டசி’ மாத்திரைகள், 98 ‘எரிமின்-5’ மாத்திரைகள், ‘ஜிஎச்பி’ எனும் வேதிப்பொருள் அடங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் திரவம் அடங்கிய 43 போத்தல்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ $163,000ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

 

அங் மோ கியோ, புவாங்கோக், கிளமென்டி, ஹவ்காங், பொங்கோல், தெம்பனிஸ் உள்ளிட்ட வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின்போது பிடிபட்டவர்களுள் 15 வயது சிறுவனும் ஒருவர்.

இம்மாதம் 20ஆம் தேதி பிற்பகலில் ஈசூன் அவென்யு 4 பகுதியில் போதைப் பொருள் கடத்துபவர் என்ற சந்தேகத்தின்பேரில் 34 வயது ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். சோதித்துப் பார்த்தபோது அவரிடம் 25 கிராம் ‘ஐஸ்’ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் வாடகைக்கு குடியிருக்கும் அறைக்குச் சென்று சோதனை செய்தபோது அங்கு $42,181 மதிப்புள்ள பல்வேறு போதைப்

பொருட்களும் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

அத்துடன், போதைப்பொருள் புழங்கி என்ற சந்தேகத்தின்பேரில் அந்த அறையில் இருந்த 37 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.