தம்முடைய முதலாளியின் அறிவுறுத்தலின்படி, சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து பயிற்சி மானியங்களைப் பெறுவதற்காக தவறான தகவல்களைத் தாக்கல் செய்ததை நிர்வாக உதவியாளர் ஒருவர் ஒப்புக்கொண்டார். இத்தகைய 14 போலி கோரிக்கைகள் மூலம் லாவ் பின் லின், 42, என்ற அந்தப் பெண்ணும் லியு மெய் யிங் எனும் அவரின் முதலாளியும் $64,000க்கும் மேற்பட்ட தொகையைப் பெற்றனர்.
கணினியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இரு குற்றச் செயல்கள் புரிந்ததை லாவ் ஒப்புக்கொண்டார். அத்துடன், ஏமாற்று, பொய்க் கணக்கு ஆகியவை தொடர்பிலும் குற்றம் புரிந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
தற்போது $15,000 பிணையில் அவர் வெளியில் இருக்கிறார். அவருக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் 13ஆம் தேதி அறிவிக்கப்படும்.
பொய்க் கணக்கு எழுதும் குற்றத்தைப் புரிந்தால் பத்தாண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

