சிங்கப்பூரில் கடந்த ஓராண்டில் தொழில்நுட்ப வேலைகளுக்கான தேவை 20% அதிகரித்துள்ளது என்று ஆள்சேர்ப்பு நிறுவனமான மைக்கல் பேஜின் அண்மைய 'ஊதிய நிலைக்குறியீடு 2019' அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக, மின்வணிகம், மின்னிலக்க சந்தைப்படுத்தல், தரவு அறிவியல் ஆகிய துறைகளில் தேவை அதிகமாக உள்ளது என்றும் ஆனால் போதிய அளவில் திறனாளர்கள் கிடைப்பதில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் ஆக அதிகமாக தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு சராசரியாக $22,000, தகவல் தொழில்நுட்ப இயக்குநர் அல்லது தகவல் தொழில் பாதுகாப்புத் தலைவர் பணிக்கு சராசரியாக $18,000 மாத ஊதியம் வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மின்னிலக்கத் துறையின்கீழ் வரும் மின்வணிக இயக்குநர் $23,000மும் மின்னிலக்கச் சந்தைப் படுத்தல் இயக்குநர்$18,000மும் சராசரி மாத ஊதியமாகப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு, மின்னிலக்க உருமாற்றம் ஆகிய துறைகளிலும் திறனாளர்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

