இணையத்தில் $10,000 கள்ள நோட்டு விற்பனை பற்றி புகார்

இணையத்தில் தான் வாங்கிய $10,000 ஆர்க்கிட் தொடர் நாணய நோட்டு போலி என்பது தெரியவந்ததை அடுத்து ஓர் ஆடவர் அது பற்றி போலிசிடம் இம்மாதம் 20ஆம் தேதி புகார் தெரிவித்தார்.

அந்த நோட்டை விற்றிருப்பதாகச் சந்தேகிக்கப்படும்  இரு நபர்களை உளவு போலிஸ் அதிகாரிகள் கைதுசெய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வயது 34 மற்றும் 55. 

பிடிபட்டு இருக்கும் 34 வயது சந்தேக நபர், ஆகஸ்ட் மாதம் இந்தோனீசியாவின் பாத்தாமில் இன்னாரென்று தெரியாத ஒருவரிடம் இருந்து $10,000 ஆர்க்கிட் தொடர் கள்ள நோட்டை வாங்கி இருப்பதாக போலிஸ் நம்புகிறது.

அந்த நபரும் 55 வயது ஆடவரும் அந்த நோட்டை இணையம் மூலம் $11,500க்கு விற்றிருப்பதாக வும் நம்பப்படுகிறது. 

கள்ளநோட்டு, இரண்டு டி-சர்ட்டுகள், ஒரு ரசீது, மூன்று கைபேசிகள், மொத்தம் $1,200 ரொக்கம் ஆகியவற்றை போலிஸ் பறிமுதல் செய்தது. கள்ள நோட்டுகளை விற்கும் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் வரை சிறையும்  அபராதமும் தண்டனையாகக் விதிக்கப்படக்கூடும்.

$10,000 ஆர்க்கிட் தொடர் நாணய நோட்டுகள் பொதுவாக புழக்கத்தில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்தகைய நோட்டுகளை வாங்கும்போது பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருந்துகொள்ள வேண்டும் என்று போலிஸ் தன் அறிக்கையில் ஆலோசனை கூறி இருக்கிறது.

Loading...
Load next