பயங்கரவாதத்தை விளக்கும் பயிற்சியில் பாவனைக் காட்சி

பயங்கரவாத மிரட்டல் பற்றிய பொதுமக்களின் புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கத்தில் இடம்பெறும் ஒரு தேசிய இயக்கத்தில் பாவனைப் பயிற்சிகளுடன் கூடிய சாலைக் காட்சி நேற்று நடந்தது.

பாவனையாகச் சோடிக்கப்பட்ட ஓர் அரங்கில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதைப்போல சித்திரிக்கப்பட்டு பயிற்சி அரங்கேற்றப்பட்டது. 

போலியான வெடிமருந்து சாதனங்களுடன் கூடிய கார் ஒன்றும் பயிற்சியில் இடம்பெற்றது. 

நார்த்பாயிண்ட் சிட்டி கடைத்தொகுதியில் நேற்று தொடங்கப்பட்ட ‘எஸ்ஜிசெக்யூர்’ சாலைக் காட்சி அடுத்த இரண்டாண்டுகளில் நகரின் முக்கிய பகுதிகளிலும் புறநகர் மையங்களிலும் நடக்கும். 

‘எப்படி செயல்படுகிறோம் என்பது முக்கியம். சிங்கப்பூரைப் பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளுடன் அந்தக் காட்சி நடந்தது. 

பயங்கரவாதத் தாக்குதலை எப்படி தடுப்பது, அதை எப்படி கையாளுவது, தாக்குதலில் இருந்து எப்படி மீண்டு வருவது ஆகியவற்றைப் பொதுமக்களுக்கு நேரடியாகக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு அது இடம்பெற்றது.

பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது சமூகம் செயல்படும் விதத்தை மேம்படுத்தவும் சமூகத்தை ஒன்று திரட்டவும் தேவையான உத்திகளையும் அந்தச் சாலைக் காட்சி போதித்தது. 

உள்துறை அமைச்சின் மேற்பார்வையில் ‘எஸ்ஜிசெக்யூர்’ இயக்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

உள்துறை அமைச்சர் 

கா சண்முகம் நேற்றைய சாலைக் காட்சியைத் தொடங்கி வைத்தார்.

சிங்கப்பூர் போலிஸ், குடிமைத் தற்காப்புப் படை, அந்தக் கடைத்தொகுதியின் ஊழியர்கள், கடைக்காரர்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொண்ட பயங்கரவாத சோடனைப் பயிற்சியைப் பார்வையாளர்கள் கண்டனர்.

அடுத்த சாலைக் காட்சிகள் அக்டோபரில் ஜூரோங் பாயிண்டிலும் நவம்பரில் வாட்டர்வே பாயிண்டிலும் நடக்க இருக்கின்றன.

அந்தக் காட்சிகளில் ‘எஸ்ஜிசெக்யூர்’ தொண்டர்களாக பார்வையாளர்கள் தங்களைப் பதிந்துகொள்ளலாம்.

அவர்கள் அடிப்படை தீயணைப்பு, முதலுதவி, மனோவியல் ரீதியிலான முதலுதவி, செயற்கை சுவாசப் பயிற்சி போன்ற உயிர்காப்புத் திறமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

Loading...
Load next