பாலர்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊட்டி வளர்க்கும் ஆசிரியர்கள்

பாலர்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊட்டி வளர்க்கும் ஆசிரியர்கள்

3 mins read
56d3e98c-e34c-4536-9839-cfe33bfa16af
பாலர்களிடம் வித்தியாசமான முறையில் தமிழ் மொழி மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் (இடம்) திருமதி தர்மராஜ் புஷ்பலதா, 46, திருமதி வள்ளியப்பன் மீனாட்சி, 42. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தலைசிறந்த பாலர் பள்ளி தாய்மொழி ஆசிரியருக்கான விருதினை வென்ற ஆறு ஆசிரியர்களில் அங் மோ கியோ- ஹவ்காங் 'பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ்' பாலர்பள்ளி ஆசிரியரான திருவாட்டி வள்ளியப்பன் மீனாட்சியும் ஒருவர்.

குழந்தைகளுக்குப் பாடங்களை கற்றுத் தருவதோடு வருங்கால இந்திய சமூகத்தினரிடையே தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் ஊட்டி வருகிறார் கடந்த 11 ஆண்டு களாக இங்கு பணியாற்றும் திருமதி வள்ளியப்பன் மீனாட்சி.

பாலர் பள்ளி மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியில் தமிழ் மொழியை அறிமுகப்படுத்தும் அவர், உண்மையான பொருட்களை "கையாண்டால் தமிழ் மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்," என்று 42 வயது திருமதி மீனாட்சி சொன்னார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஆசிரியராக பணியாற்றிய அவர் இந்தச் சேவையைத் தொடங்கியபோது சில சவால்களைச் சந்தித்தாலும் காலப்போக்கில் அவருக்கு இருந்த பற்று அவரை அனுபவமிக்க ஆசிரியராக மாற்றியதென அவர் குறிப்பிட்டார்.

"வெவ்வேறு காய்கறிகள். பழங்கள், பொருட்கள் போன்றவற்றின் பெயர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது அவற்றை உண்மையாக வகுப்புக்குக் கொண்டு வந்து மாணவர்களுக்குக் காட்டுவேன்.

"ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பல பழங்களை மாணவர்கள் நேரடியாக பார்த்துத் தொடுவதனால் அவர்களால் தமிழ் மொழியுடன் எளிதில் தொடர்புகொள்ள முடிகிறது.

"தமிழ் மொழி கற்றலும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகிறது. ஆனால் ஒரு மணி நேர வகுப்பின் மூலம் மட்டும் மாணவர்களால் தமிழ் மொழியை முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது.

"பெற்றோர் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை பற்றி தினசரி பிள்ளைகளிடம் எடுத்துக்கூறி சுலபமான வார்த்தைகளில் அவர்களிடம் வீட்டில் பேசினால் தமிழ் மொழியில் உரையாடுவதற்கும் அதை இன்னும் ஆழமாக கற்பதற்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும்," என்ற திருமதி மீனாட்சி, வியாபார நோக்கில் ஆங்கிலம் அவசியம் என்றாலும் தமிழ் மொழி கற்றல் மூலம் இந்தியர்களிடையே சமூக பிணைப்பை வலுப்படுத்தி நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

இவ்விருதினை வென்ற மற்றொரு ஆசிரியர் திருவாட்டி தர்மராஜ் புஷ்பலதா,46. நான்கு ஆண்டுகளாக பாய லேபார் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ்' பாலர் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். மாணவர்களின் எதிர்பார்ப்பு, விருப்பங்களுக்கு ஏற்ப பாடங்களை நடத்துவதால் சிறார்களை எளிதில் ஈர்த்துவிடலாம் என்பதை திருமதி புஷ்பலதா உறுதியாக நம்புகிறார். இக்காலத்தில் சிறார்களி லிருந்து பெரியவர்கள் வரை தொழில்நுட்பத்தைத் தங்களது தினசரி வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் பல சிறார்கள் கணினி, கைபேசி விளையாட்டுகளில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆனால், அதே தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி தமிழ் மொழியைக் கற்பித்து வருகிறார் திருமதி புஷ்பலதா.

"மழலைப் பாடல்களையும் கதைகளையும் 'யூடியூப்' காணொளி களின் வழி மாணவர்களுக்குக் கற்றுத் தருவேன்.

"தொழில்நுட்பத்தில் குழந்தை களுக்கு மிகுந்த ஈடுபாடு இருப்பதால் அதை வைத்து அவர்களை தமிழ் மொழி கற்றலுக்கு ஈர்த்துவிடலாம். "தமிழ் வானொலி நிகழ்ச்சிகள், செய்திகள், ஒலி்பரப்பப்படும் பாடல்களைத் தமிழில் அடிக்கடி கேட்பதால் அவர்களுக்குத் தமிழ் மொழி சொற்கள் அறிமுகமாகும். "தமிழ் மொழியின் அடிப்படை அம்சங்கள் விரைவில் ஆழமாகப் பதியும்," என்று கூறிய திருவாட்டி தர்மராஜ் புஷ்பலதா, தமிழ் முரசு வெளியிடும் 'பாலர் முரசு' தொகுப்பும் தமிழ் மொழி கற்பித்தலுக்குக் கைகொடுத்து வருகிறது என்றார்.

இந்த விருது தமது முயற்சிகளை அங்கீகரித்ததாகக் கூறிய அவர், தமிழ் மொழி அமுதை அமுதமாய் சிறார்களுக்கு ஊட்ட ஊக்குவித்துள்ளது என்று புன்முறுவலுடன் கூறினார். சென்ற சனிக்கிழமை சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தாய்மொழி கருத்தரங்கில் தலைசிறந்த பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் கல்வி அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.