சிங்கப்பூரில் கடந்த 12 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக பணியாற்றிவரும் செல்வி உச்சி முட்ஜியாட்டிக்கு தனது நடனத் திறமைகளை காட்ட வாய்ப்பு கிட்டியதில்லை.
ஆனால் நேற்று நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தோனீசியரான 42 வயது உச்சி முட்ஜியாட்டி பாரம்பரிய ஜாவானிய நடனத்தை ஆடி அனைவரின் மனதைக் கவர்ந்தார்.
2019 குடியேறிகளின் கலாசார காட்சி சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இதில் இசை, நடனம், நாடகம், கவிதை போன்றவற்றை பங்ளாதேஷ், இந்தோனீசியா, மியன்மார், இந்தியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் படைத்தனர்.
அலிவால் கலை நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டி அளித்த உச்சி, சிறு வயதிலிருந்தே நடனமாடுவது பிடிக்கும் என்றார்.
"என்னுடைய நடனத்தையும் என்னுடைய கலாசாரத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இது ஒரு அருமையான தளம்," என்றார் அவர். இந்த நிகழ்ச்சிக்காக ஜூன் மாதத்திலிருந்து விடுமுறை நாட்களில் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இவ்வாண்டு இரண்டாவது முறையாக குடியேறிகளுக்கான கலாசார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்கு ஏற்பாடு செய்த பங்ளாதேஷ் நாட்டவரான பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஃபஸ்லி இலாஹி ருபெல், இம்முறை 100க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சிகளை படைத்ததாகக் கூறினார். கடந்த முறை 90 பேர் கலந்துகொண்டனர்.

