உலகப் பொருளியல் சவா லான காலகட்டத்தை எதிர் நோக்கியுள்ளது. இருந்தாலும் இதனை சிங்கப்பூரர்கள் தகுந்த திறன்களுடனும் மனப்போக்குடனும் சமாளித்துவிடுவார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று அங் மோ கியோவில் டெக் கீயில் நடைபெற்ற தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
கடந்த வாரம் தேசிய தினக் கூட்டத்தில் பொருளியல் பற்றியும் சிங்கப்பூரை பாதிக்கக்கூடிய உலகின் நிச்சயமற்ற சூழ்நிலை பற்றியும் பேசியதை நினைவுகூர்ந்த பிரதமர் லீ, இதற்கு பதில் நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்றார்.
"பொருளியலைத் தூண்டும் நடவடிக்கைகளோ, உதவித் திட்டங்களோ மட்டுமல்லாமல் பயிற்சி, மேம்பாடு, நிறுவனங்களின் உருமாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
புதிய திறன்களை ஊழியர்கள் கற்றுக் கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், மாறிவரும் பொருளியலுக்கு ஏற்ப திறன்களைப் பெற்றிருப்பது அவசியம் என்றார்.
"மூத்த ஊழியர்களும் தொடர்ந்து பயிற்சிகளை பெற வேண்டும். இவைதான் நிறுவனங்களுக்கு கைகொடுக்கும். அப்போதுதான் சிரமமான பொருளியல் சூழ் நிலையைச் சிங்கப்பூர் சமாளிக்க முடியும்," என்று திரு லீ கூறினார்.
ஒரு குழந்தைக்கு மேல் உள்ள குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் தேசிய தின பேரணியில் அறிவிக்கப்பட்ட கழிவு, பாலர் பள்ளிக் கட்டணக் குறைப்பு ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம், பாலர் பள்ளி கட்டணத்தில் கழிவுகளைப் பெறு வதற்கான மாத வருமான வரம்பை 7,500 வெள்ளியிலிருந்து 12,000 வெள்ளிக்கு உயர்த்தியது. இதனால் கூடுதலாக 30,000 குடும்பங்கள் நிதியுதவிக்குத் தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் கல்வி உதவி நிதி மேம்படுத்தப்படும் என்று தேசிய தினக் கூட்டத்தில் பிரதமர் லீ அறிவித்திருந்தார்.

