மியன்மார் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய முன்னாள் வட்டார மேலாளருக்கு விதிக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை போதாதென அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீடு செய்ததன்பேரில், தண்டனைக் காலத்தை 30 மாதங்களாக உயர்நீதிமன்றம் உயர்த்தியிருக்கிறது.
குமாரி மோ மோ தான் என்ற பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக 41 வயது டே வீ கியட்டுக்கு மாவட்ட நீதிபதி முன்னதாகத் தண்டனை விதித்திருந்தார்.
பணிப்பெண்ணை டே உதைத்ததாகவும், மற்றொரு பணிப்பெண்ணை அறையச் செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதோடு, தனது வீட்டிலிருந்த பௌத்த பூஜை மாடத்தில் இரு பணிப்பெண்களையும் டே வழிபடச் செய்தார். பணிப்பெண்களில் ஒருவர் கிறிஸ்துவர், மற்றொருவர் முஸ்லிம். இந்தக் குற்றங்களுக்கு முன்னதாக விதிக்கப்பட்ட தண்டனை போதாது எனத் தீர்மானித்த நீதிபதி ஹூ ஷியூ பெங், தண்டனைக் காலத்தை 30 மாதங்களுக்குக் கூட்டினார்.

