கடந்த நான்காண்டுகளில் வேலையிடங்களில் காயமேற்படுத்திய சம்பவங்களில் கிட்டத்தட்ட 30%, வழுக்கி விழுதல், தடுக்கி விழுதல், கீழே விழுதல் தொடர்பானவை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்விளைவாக அந்தக் காலகட்டத்தில் ஆண்டுதோறும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் வழுக்கி, தடுக்கி, கீழே விழுந்த 1,844 சம்பவங்களில் காயங்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,744ஆக இருந்தது.
சமையலறை பாதுகாப்பு தொடர்பாக ரீஜென்ட் சிங்கப்பூர் ஹோட்டலில் நேற்று நடந்த வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கருத்தரங்கின்போது மனிதவள, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார். சிங்கப்பூர் ஹோட்டல் சங்கம் இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
வழுக்கி, தடுக்கி, கீழே விழுவதால் காயமடைவது அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என்ற துணை அமைச்சர், அவற்றில் விருந்தோம்பல், பொழுதுபோக்குத் துறையில் நிகழ்ந்த சம்பவங்களில் கிட்டத்தட்ட பாதியளவு சமையலறையிலேயே ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
அதிலும் ஹோட்டல்கள், உணவு, பானக் கடைகளின் சமையலறைகளில் பணியாற்றும் ஊழியர்களே வழுக்கி, தடுக்கி, கீழே விழுந்து அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. உச்ச நேரத்தின்போது, விரைந்து வேலையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தாததே இத்தகைய 80% சம்பவங்களுக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மனிதவள அமைச்சு தனது அமலாக்க நடைமுறைகளை முடுக்கிவிட்டது.

