சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் புதிய சமூக நிறுவன உணவங்காடி நிலையங்கள் அமையவுள்ளன.
வரும் 2027ஆம் ஆண்டிற்குள் அத்தகைய 13 உணவங்காடி நிலையங்கள் கட்டி முடிக்கப்படும். அவற்றுள் முதலாவதாக செம்பவாங்கில் அடுத்த ஆண்டு புக்கிட் கேன்பெரா விளையாட்டு, சமூக மன்றம் திறக்கப்படவுள்ளது. இப்போதைக்கு சிங்கப்பூரில் ஏழு சமூக நிறுவன உணவங்காடி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோஃபு நிறுவனத்தின் ஹாக்கர் மேனேஜ்மென்ட், ஃபெய் சியோங் சமூக நிறுவனம், என்டியுசி ஃபுட்ஃபேர், டிம்பர்+ஹாக்கர்ஸ், கோப்பித்தியம் நிறுவனத்தின் ஓடிஎம்எச் ஆகிய ஐந்து சமூக நிறுவனங்கள் அந்த ஏழு உணவங்காடி நிலையங்களை நிர்வகித்து வருகின்றன.
சிங்கப்பூரில் உள்ள மற்ற உணவங்காடி நிலையங்களில் பெரும்பாலானவற்றை வீடமைப்புக் கழகமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் மேற்பார்வை செய்து வருகின்றன.
புதிய 13 சமூக நிறுவன உணவங்காடி நிலையங்களில் உணவுக்கடைகளைத் தொடங்குபவர்கள் முதல் ஈராண்டுகளுக்குக் குறைவான வாடகையையே செலுத்துவர்.
காப்பிக் கடைகளும் உணவுக்கூடங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதை அடுத்து, சமைத்த உணவுப்பொருட்களின் விலையை நிலைப்படுத்த உதவும் நோக்கில், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2011ல் அரசாங்கம் புதிய உணவங்காடி நிலையங்களைக் கட்டத் தொடங்கியது.
சமூக நிறுவன உணவங்காடி நிலைய மாதிரியின்கீழ் பாத்திரம் கழுவுதல் மையப்படுத்தப்பட்டு, தட்டுகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கான தானியக்க முறை அறிமுகப்படுத்தப்பட்டன. மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் தூய்மையான சுற்றுப்புறத்தை உறுதிசெய்யவும் ஏதுவாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

