அனைத்து போக்குவரத்து வசதிகளையும் உள்ளடக்கும் செயலிகள் நிலப் போக்குவரத்து துறையில் புதிய அம்சமாக திகழும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (படம்) தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு போக்குவரத்து முறைகளுக்கு பயணிகள் கட்டணம் செலுத்தி ஒரே தளத்தில் பயணங்களைத் திட்டமிட MaaS என்று அழைக்கப்படும் இந்தச் செயலிகள் வகைசெய்யும் என்றார் அவர். கார்களை வைத்திருப்பதற்குப் பதிலாக மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்தச் செயலிகள் உதவும். பயணங்களைத் திட்டமிட உதவும் 'சிட்டிமேப்பர்', 'கூகல் மேப்ஸ்' போன்ற செயலிகளைப் போலவே MaaS தளங்கள் மூலமாகவும் பல்வேறு போக்குவரத்து முறைகளில் பயணங்களைத் திட்டமிட முடியும்.ஒருசில வேளைகளில், செயலி மூலம் குறிப்பிட்ட மாதக் கட்டணத்தைச் செலுத்தி எண்ணிக்கை வரம்பில்லாமல் பொதுப் போக்குவரத்துப் பயணங்களை மேற்கொள்ளவும் முடியும்.
'நெட்ஃபிளிக்ஸ்', 'ஸ்போட்டிஃபை' போன்ற கேளிக்கை தளங்களில் சந்தா அடிப்படையில் விதிக்கப்படும் கட்டண முறையைப் போலவே இவை செயல்படும் என்று ஃபின்லாந்தைச் சேர்ந்த MaaS Global நிறுவனம் கூறுகிறது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிலப் போக்குவரத்து தொடர்பான அனைத்துலக கருத்தரங்கு தொடரில் கலந்துகொண்டு டாக்டர் ஜனில் பேசினார்.
சிங்கப்பூர் சந்தையில் இந்தப் போக்குவரத்துச் சேவையை வழங்க குறைந்தது இரு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. உள்ளூர் போக்குவரத்து நிறுவனமான கம்ஃபர்ட் டெல்குரோவுடன் இணைந்து 'விம்' எனப்படும் செயலியை இங்கு தொடங்குவது குறித்து MaaS Global நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவித்திருந்தது. இந்நிலையில், MaaS தளம் சிங்கப்பூரில் செயல்படும் முறை மற்ற நாடுகளில் அது செயல்படும் முறைக்கு மாறாக இருக்கும் என்று டாக்டர் ஜனில் கூறினார். அந்த நாடுகளில் தனியார் கார் பயன்பாடு அதிகம் இருப்பதும் பொதுப் போக்குவரத்து பயன்பாடு குறைவாக இருப்பதும் அதற்குப் பல காரணங்களில் ஒன்று.

