காதலியின் சுயநினைவில்லாத ஆறு மாதக் குழந்தையை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஒரு தாதியிடம் கொடுத்துவிட்டு தப்பியோடிய ஆடவரை போலிசார் தேடி வருகின்றனர்.
குழந்தை கொடுமைப்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் அந்தச் சம்பவத்தின் தொடர்பில் கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 1.40 மணியளவில் போலிசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக, மருத்துவமனையின் சுற்றுவட்டாரத்தில் தேடிய போலிசார், லோவர் டெல்டா சாலையை நோக்கிச் செல்லும் ஜாலான் புக்கிட் மேராவில் அந்த 28 வயது ஆடவரின் காரை வழிமறித்தனர். போலிசாரைக் கண்டதும் ஆடவர் தப்பியோடினார். அவரது காரில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இரண்டு கலகத்தடுப்பு வாகனங்கள் தேடலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், குழந்தையைக் கொடுமைப்படுத்திய சந்தேகத்தின்பேரிலும் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களின்பேரிலும் குழந்தையின் 28 வயது தாயாரை போலிசார் கைது செய்தனர்.
தப்பியோடிய ஆடவரை போலிசார் தேடி வருகின்றனர். அந்தக் குழந்தை தற்போது கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பராமரிக்கப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது.

