உயிரிழந்த பணிப்பெண்ணின் படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த முன்னாள் எஸ்ஐஏ விமானி குற்றத்தை ஒப்புக்கொண்டார்

உயிரிழந்த பணிப்பெண்ணின் படத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த முன்னாள் எஸ்ஐஏ விமானி குற்றத்தை ஒப்புக்கொண்டார்

2 mins read
55a878b9-5325-46c1-b0eb-fe9da215fb09
ஃபஸ்லி ஹிஷாம் முகம்மது ஃபைரூஸ் ஷா -

மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த தமது காதலியிடமிருந்து, உயிரிழந்து கிடக்கும் பணிப்பெண் ஒருவரது புகைப்படம் ஒன்று தமக்கு கிடைத்ததையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) முன்னாள் விமானி ஒருவர் 'வாட்ஸ்அப்' செயலியில் அதைப் பகிர்ந்தார். இச்சம்பவத்தின் தொடர்பில், அதிகாரபூர்வ ரகசியச் சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து ஃபஸ்லி ஹிஷாம் முகம்மது ஃபைரூஸ் ஷா (படம்), 29, மீதான குற்றம் நேற்று நிரூபணமானது.

தனியார் ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றுக்கு அப்போது அவரது காதலி நூரிஸா அஃபிகா ஹுசேன் பணிபுரிந்தார். அதிகாரபூர்வ ரகசியச் சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளை அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிகழ்ந்தது. அப்போது உயிரிழந்த அந்தப் பணிப்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ‌ஷேக் ஹஸிக் ஃபஹ்மி ஷேக் நசிர் ஜோஹார் புகைப்படம் எடுத்தார். அதை வாட்ஸ்அப் குழு ஒன்றில் அவர் பகிர்ந்தார்.

அந்தக் குழுவில் இடம்பெற்ற நூரிஸா, அந்தப் புகைப்படத்தைத் தமது காதலன் ஃபஸ்லிக்கு அனுப்பிவைத்தார். அப்போது எஸ்ஐஏ விமானியாக பணிபுரிந்துகொண்டிருந்த ஃபஸ்லி, இச்சம்பவத்திற்கு பின்னர் பணியிலிருந்து விலகினார்.

தமக்கு வந்த புகைப்படத்தை நண்பர்கள் வட்டத்தில் ஃபஸ்லி பகிர்ந்தார். இறந்த பணிப்பெண்ணின் படத்தை எடுத்த ஹஸிக்கிற்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் $1,500 அபராதம் விதிக்கப்பட்டது. தனியார் ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் அந்த நிறுவனத்தில் நூரிஸாவும் ஹசிக்கும் இப்போது பணியாற்றவில்லை. $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஃபஸ்லி, அடுத்த மாதம் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.