மியன்மார் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய வழக்கில் ஆடவரின் சிறைத் தண்டனைக்காலம் 30 மாதங்களாக நீட்டிப்பு

மியன்மார் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய வழக்கில் ஆடவரின் சிறைத் தண்டனைக்காலம் 30 மாதங்களாக நீட்டிப்பு

2 mins read
74f1c23d-24ec-418f-912f-5b960b3ebf68
சிறைத் தண்டனையை அனுபவிக்கும் டே வீ கியட், சியா யுன் லிங். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படங்கள். -

மியன்மார் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய முன்னாள் வட்டார மேலாளருக்கு விதிக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை போதாது என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீடு செய்ததன்பேரில், தண்டனைக் காலத்தை 30 மாதங்களாக உயர் நீதிமன்றம் உயர்த்தியிருக்கிறது.

குமாரி மோ மோ தான் என்ற பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக 41 வயது டே வீ கியட்டுக்கு மாவட்ட நீதிபதி முன்னதாகத் தண்டனை விதித்திருந்தார். மியன்மாரைச் சேர்ந்த மோ மோ தான், இந்தோனீசியாவைச் சேர்ந்த ஃபிட்ரியா ஆகிய இரு பணிப்பெண்களை டே துன்புறுத்தினார்.

பணிப்பெண்களில் ஒருவரை டே உதைத்ததாகவும் இரு பணிப்பெண்களையும் ஒருவரை ஒருவர் அவர் அறையச் செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதோடு, தனது வீட்டிலிருந்த பௌத்த பூஜை மாடத்தில் இரு பணிப்பெண்களையும் டே வலுக்கட்டாயமாக வழிபடச் செய்தார். பணிப்பெண்களில் ஒருவர் கிறிஸ்துவர், மற்றொருவர் முஸ்லிம்.

இந்தக் குற்றங்களுக்கு முன்னதாக டேவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹூ ஷியூ பெங், தண்டனைக் காலத்தை நேற்று 30 மாதங்களுக்குக் கூட்டினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள டேயின் மனைவி சியா யுன் லிங், 34, மியன்மார் பணிப்பெண்ணுக்கு $1,450 மதிப்பிலான சம்பளத்தை வழங்க தவறியதற்காக அவருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய இந்த வழக்கில் அவருக்கு ஏற்கெனவே 47 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதே தண்டனைக் காலத்தில் சியா இந்த மூன்று மாதச் சிறைத் தண்டனையையும் அனுபவிப்பார்.

மியன்மார் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதற்காக டே-சியா தம்பதிக்கு இவ்வாண்டு மார்ச் 27ஆம் தேதி சிறைத் தண்டனைக் காலம் தொடங்கியது.