சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு கடப்பிதழைப் பெற முதலாளியைக் கத்தியால் மிரட்டிய கர்ப்பிணி பணிப்பெண்ணுக்கு நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த பொனியெம் என்று அழைக்கப்படும் அந்த 41 வயது பணிப்பெண், சிங்கப்பூருக்கு வருமுன் இவ்வாண்டு தொடக்கத்தில் திருமணமானவர்.
இவ்வாண்டு ஏப்ரலில் சிங்கப்பூரில் பணிபுரியத் தொடங்கிய அவர் ஈராண்டு காலத்துக்கு வேலை செய்வதாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் தாம் கர்ப்பமாக இருப்பதால் சிங்கப்பூரில் பணிபுரிய விருப்பமில்லை என்று மே மாதம் பொனியெம் முதலாளியிடம் கூறினார்.
பணிப்பெண்களை வேலைக்குச் சேர்க்கும் முகவர் மற்றொரு பணிப்பெண்ணை ஏற்பாடு செய்யும் வரை காத்திருக்கும்படி முதலாளி அவரிடம் சொன்னார்.
ஆனால் கடப்பிதழை முதலாளியிடமிருந்து பலவந்தமாக எடுத்துக்கொண்டு சிங்கப்பூரைவிட்டு கிளம்ப பொனியெம் திட்டம் தீட்டினார்.
அதன்படி, மே 21ஆம் தேதி முதலாளியின் முகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்ததோடு அவருடைய மகளைக் கத்திரிக்கோலால் பொனியெம் மிரட்டினார். மகளின் உயிருக்கு ஆபத்துள்ளதை அறிந்து பொனியெத்திடம் அவரது கடப்பிதழையும் $200 பணத்தையும் அந்த முதலாளி ஒப்படைத்தார். அதை எடுத்துக்கொண்டு பொனியெம் அங்கிருந்து கிளம்பினார்.
டாக்சியில் தானா மேரா கப்பல் முனையத்திற்கு விரைந்த அவர், பின்னர் அங்கு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
வேண்டுமென்றே ஒருவருக்கு காயம் விளைவித்த குற்றத்துக்குப் பொனியெம்முக்கு ஈராண்டு வரை சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

