சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம், அதன் விமானங்கள் அனைத்திலும் பழைய ரக 'மேக்புக் புரோ' 15 அங்குல மடிக்கணினிகள் சிலவற்றுக்குத் தடை விதித்துள்ளது.
2015ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து 2017 பிப்ரவரி வரை விற்கப்பட்ட மடிக்கணினிகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மின்கலன்கள் பாதுகாப்பானவை என்று தயாரிப்பாளர்கள் உறுதிசெய்யாத மடிக்கணினிகளைப் பயணிகள் தங்கள் பயணப்பெட்டிகளிலோ கைப்பைகளிலோ எடுத்துச் செல்ல வேண்டாம் என்று எஸ்ஐஏ நேற்று முன்தினம் அதன் இணையப்பக்கத்தில் குறிப்பட்டது.
சிலவகை 'மேக்புக் புரோ' மடிக்கணினிகளை மீட்டுக்கொள்ளப் போவதாக ஆப்பிள் நிறுவனம் இவ்வாண்டு ஜூன் மாதம் அறிவித்திருந்தது. அந்த மடிக்கணினிகளில் உள்ள மின்கலன்கள் அதிகளவு சூடுபிடிக்கக்கூடிய அபாயம் இருப்பதால் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வாடிக்கையாளர்கள் தங்கள் 'மேக்புக் புரோ' மடிக்கணினிகள் பாதிக்கப்பட்டவையா என்பதை ஆப்பிள் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
எஸ்ஐஏவைத் தவிர்த்து, தாய் ஏர்வேஸ் உட்பட பல விமான நிறுவனங்களும் இந்த மடிக்கணினிகளுக்குத் தடை விதித்துள்ளன.

