சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் சட்டத்தில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். புதிய மிரட்டல்களை அரசாங்கம் உரிய காலத்தில் விரிவாகக் கையாளுவதற்கு இம்மாற்றங்கள் வழிவகுக்கும்.
இவ்விவரத்தை நேற்று அறிவித்த பிரதமர் லீ சியன் லூங், சமய நல்லிணக்கப் பேணல் சட்டத்தின்கீழ் தனக்குள்ள அதிகாரத்தை அரசாங்கம் கடந்த 30 ஆண்டுகளில் பயன்படுத்தியதே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், இப்போது நிலைமை குறிப்பிடத்தக்க அளவு மாறியிருப்பதாக அவர் சொன்னார்.
"சமூக ஊடகத்தின் பரவலான பயன்பாட்டால், பொய்யுரைகளின் மூலம் மனதைப் புண்படுத்துவதும், மற்றவர்கள் அந்தப் பொய்யுரைகளால் புண்படுவதும் வெகு எளிதாகிவிட்டது," என்று சிங்கப்பூர் அனைத்து சமய அமைப்பின் 70வது ஆண்டு நிறைவு விருந்தில் பிரதமர் லீ கூறினார்.
சமய நல்லிணக்கப் பேணல் சட்டம் 1990ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, ஈராண்டுகளுக்குப் பிறகு நடப்புக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களிடையில் மனக்கசப்பை விதைப்போருக்கு எதிராகக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை அரசாங்கம் பிறப்பிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்தைப் புதுப்பிக்கும் திட்டங்களைச் சட்ட, உள்துறை அமைச்சர் திரு கா.சண்முகம் சென்ற மாதம் அறிவித்தார்.
உணர்வுகளைத் தூண்டும் விவகாரங்களை வெளிப்படையாகப் பேசக்கூடிய வகையில் மக்களிடையில் பரஸ்பர நம்பிக்கையை சிங்கப்பூர் வளர்த்திருப்பதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
"ஆனால் சமயத்தைப் பற்றி கட்டுப்பாடில்லாமல் கண்டபடி வீண்பேச்சு பேசுவதையோ, அல்லது சினமூட்டும் அல்லது இறைவனை நிந்திக்கும் கேலிச்சித்திரங்கள், படைப்புகள், காணொளிகள் ஆகியவற்றையோ நாங்கள் அனுமதிப்பதில்லை, இனிவரும் நெடுங்காலத்திற்கும் அனுமதிக்கக்கூடிய சாத்தியமும் இல்லை," என்றார் அவர்.

