லிட்டில் இந்தியாவில் புகையிலை வைத்திருந்தவர்கள் கைது

வாயில் போட்டு மெல்லும் புகையிலையை வைத்திருந்ததற்காகவும் அதனை விற்பனை செய்ததற்காகவும் ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 25) திங்கட்கிழமையும் பதினேழு பேர் கைது செய்யப்பட்டனர். மெல்லும் புகையிலை சட்டவிரோதப் பொருளாகக் கருதப்படுகிறது. 

“கைனி புகையிலை” விற்பனை செய்ததற்காக இத்தனை பேர் கைதாகியிருப்பது இதுவே முதல் முறை. கைனி புகையிலையால் வாய்ப் புற்றுநோய் ஏற்படும் என சுகாதார அறிவியல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 

போலிசாரும் ஆணையமும் லிட்டில் இந்தியாவிலும் ஜூரோங்கிலுள்ள பொருள் காப்பிடத்திலும் நடத்திய இரண்டு நாள் சோதனையின்போது இந்த 17 பேரும் பிடிபட்டனர். 

புகையிலை விற்றவர்களில் இருவர் சமூக வருகையாளர்களாக சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவ்விருவரும் தத்தம் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். 

நடைபாதையிலுள்ள உலோகத் தகட்டுக்கு அடியிலும், ஆலயத்திலிருந்த காலணி வைக்கும் அடுக்கிலிருந்த ஒரு தோள்பையிலும் மெல்லும் புகையிலை பதுக்கு வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

மொத்தம் சுமார் $42,000 மதிப்புள்ள 21,000க்கும் மேலான புகையிலை பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. 

கைதானவர்களை போலிசார் விசாரித்து வருகின்றனர். 

மெல்லும் புகையிலையை இறக்குமதி செய்வதும், விநியோகிப்பதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். 

இக்குற்றத்தைப் புரிவோருக்கு $10,000 வரையிலான அபராதம், ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். 

அதே குற்றத்தை மறுபடியும் செய்வோருக்கு $20,000 வரையிலான அபராதம், 12 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.